பக்காத்தான் ஹரப்பான் ஆட்சியில் இந்துகளுக்கு விடிவுக் காலம் பிறக்கட்டும்!
மே 11- நடந்து முடிந்த 14வது பொதுத்தேர்தலில் துன் டாக்டர் மகாதீர் தலைமையிலான ஹரப்பான் கூட்டணி வெற்றி பெற்றதற்கு மலேசிய இந்து சங்கம் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
புதிய அரசாங்கத்தின் கீழ் மலேசியாவில் வாழும் இந்துகள் நலமாகவும் வளமாகவும் வாழும் அதே வேளையில் அவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் ஆலயம் உட்பட்ட பல பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.
குறிப்பாக, மலேசிய இந்தியர்களுக்கும் இந்துகளுக்கும் பெரும் கவலையை உண்டாக்கிய ஷரியா சட்ட மசோதா முடிவு இந்துகளுக்கு பாதகமில்லாத வகையில் அமையவேண்டும் என இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.
மேலும், கடந்த 10 வருடமாக ஆலயப் பிரச்சனைகள் தொடர்பாக பிரதமரைச் சந்திக்க மலேசிய இந்து சங்கம் பலமுறை முயன்றும் அதற்கு அரசியல் கட்சிகள் முட்டுக் கட்டையாக இருந்தது வருத்தற்குரியது. அதுபோன்ற சம்பவங்கள் ஏதும் புதிய அரசாங்கத்தில் நடக்கக் கூடாது என சங்கம் எதிர்பார்க்கிறது.
அதேவேளையில், இதுநாள் வரை சங்கமும் இந்துகளும் ஆலயங்களும் சந்தித்து வந்த பிரச்சனைகளைக் களையும் விதமாக, விரைவில் புதிய பிரதமர் துன் டாக்டர் மகாதீரைச் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்படும். அதற்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் புதிய அரசாங்கம் இந்து சங்கத்துடன் கலந்துரையாட முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
புதிய அரசாங்கத்தின் வழி நாட்டு மக்கள் நலம் பெற வேண்டி, ஆலயங்கள் சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளவேண்டும் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது என அதன் தேசியத் தலைவர் ஶ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ்.மோகன் ஷான் கூறினார்.