ஜாகீர் நாயக்கை மலேசியாவிலிருந்து வெளியேற்ற மறுப்பதா? மலேசிய இந்து சங்கம் கண்டனம்!
ஜூலை 9- சர்ச்சைக்குரிய மத போதகரான ஜாகீர் நாயக்கை மலேசியாவிலிருந்து வெளியேற்ற மலேசிய இந்துக்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், அவரை வெளியேற்றுவதற்கான அவசியம் இப்போது இல்லை எனக் கூறிய பிரதமரின் கருத்துக்கு மலேசிய இந்து சங்கம் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.
இந்து மதம் மட்டுமின்றி நாட்டில் உள்ள மற்ற மதத்தினரும் மனம் வருத்தும் அளவிற்கு சமய பிரச்சாரம் செய்து வரும் மத போதகரான ஜாகீர் நாயக்கிற்கு எதிராக இந்து சங்கம் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் குரல் எழுப்பி வருகிறது. அச்சமயம் ஆட்சியில் இருந்த முந்தைய அரசாங்கம் ஜாகீர் நாயக்கிற்கு நிரந்தர குடியுரிமை வழங்கிய நிலையில் அன்று எதிர்க்கட்சியாக இருந்த பக்காத்தான் உறுப்பு கட்சிகள் அவருக்கு எதிராக குரல் எழுப்பின.
ஆனால் இன்றோ, ஆட்சியில் இருக்கும் பக்காத்தான் ஹரப்பான், இந்தியா கேட்டுக் கொண்டும் ஜாகீர் நாயக்கை மலேசியாவிலிருந்து வெளியேற்ற மறுப்பது கண்டனத்திற்குரியது என மலேசிய இந்து சங்கம் கருதுகிறது. தற்போது ஜாகீர் நாயக் வெளிப்படையாக பிரச்சாரங்கள் செய்வது குறைவது என்றாலும் இதுநாள் வரை அவர் இந்து மதம் உட்பட மற்ற மதங்களை இழிவுப்படுத்தியதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
புதிய மலேசியா பிறந்துள்ள நிலையில், இந்துக்களுக்கு நல்ல காலம் பிறக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படும் வேளையில், ஜாகீர் தொடர்பான பிரதமர் துன் மகாதீரின் கருத்து இந்துக்களிடையே மன சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதிய அரசாங்கத்தில் பதவியில் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களும் இந்திய பிரதிநிதிகளும் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் எனவும் கூடிய விரைவில் ஜாகீர் நாயக்கை நாட்டிலிருந்து வெளியேற்ற ஆவன செய்ய வேண்டும் எனவும் மலேசிய இந்து சங்கம் எதிர்ப்பார்க்கிறது.