மகாளயபட்ச அமாவாசை எப்போது? மலேசிய இந்து சங்கம் விளக்கம்!

அக்டோபர் 3 –    வருகிற மகாளயபட்ச அமாவாசை தர்ப்பண தேதியில் எந்த குழப்பமும் இல்லை. எதிர்வரும் திங்கட்கிழமை 08.10.2018, விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 22ஆம் தேதி தான் மகாளயபட்ச அமாவாசை தர்ப்பணம் என்பது மலேசிய இந்து சங்கம் நாள்காட்டியில் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளது என டத்தோ ஆர்.எஸ்.மோகன் ஷான் கூறினார்.

சிரார்த்த திதி நிர்ணய விதி: சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரையான நாழிகையை கணக்கிட்டு (பகல் அகஸ்) அதை ஐந்து பாகமாக்கி அதில் நான்காவது பாகமாகிய அபரான்ன காலம் முழுவதும் ஒரு திதி வியாபித்திருந்தால் அதுவே சந்தேகமின்றி அன்றைய சிரார்த்த திதியாகும். அப்படி இல்லாமல் ஒரு நாள் அபரான்ன காலத்தில் சில நாழிகைகளும் மறுநாள் அபரான்னத்தில் சில நாழிகைகளும் இருந்தால் எந்த நாளின் அபரான்னத்தில் அதிகமாக வியாபித்து இருக்கிறதோ அன்றே அந்த திதியாகும். காலையில் தர்ப்பணம் செய்யும் போது அந்த திதி இருக்க வேண்டிய அவசியமில்லை. அபரான்ன காலத்தில் இருந்தால் போதுமானது.

புரட்டாசி மாதம் 22ஆம் தேதி அமாவாசை திதி அபரான்ன காலத்துக்கு முன்பே, அதாவது உதயாதி 17.09க்கு ஆரம்பித்து அபரான்னம் முழுவதும் இருக்கிறது. மறுநாள் 23ஆம் தேதி உதயாதி 13.17க்கு, அபரான்ன காலத்துக்கு முன்பே முடிந்துவிடுகிறது. அதனால் குழப்பமின்றி புரட்டாசி 22 (ஆங்கில தேதிப்படி 08.10.2018) தான் மகாளய அமாவாசை தர்ப்பணம்  என மலேசிய இந்து சங்கம் தலைவர் ஸ்ரீகாசி, டத்தோ மோகன்ஷான் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

You may also like...