டத்தோ மோகன் ஷான்னைப் பதவி விலக சொல்ல யாருக்கும் அருகதை கிடையாது! – கௌ. பொதுச் செயலாளர் த.கணேசன்

அக்டோபர் 26-  பல ஆண்டுக் காலமாக ஆட்சியில் இருந்தவர்கள் இன்று ஆலய விவகாரத்தில் மலேசிய இந்து சங்கத்தைக் குறி வைத்து குறைக் கூறிவருவது வேடிக்கையாக இருக்கிறது. அரசியல் ரீதியில் மாவட்ட உறுப்பினராகவும் செனட்டராகவும் மாண்புமிகுவாகவும் பதவிகளை அலங்கரித்தவர்கள் அன்று ஆலயத்தைக் காப்பாற்ற முயற்சி ஏதும் செய்யாமல் இன்று வெற்று கூப்பாடுகளைப் போடுவது விந்தையிலும் விந்தை.

சீபீல்டு ஆலய விவகாரம் நேற்று இன்று தொடங்கிய விவகாரமா? அது 20 ஆண்டுகளுக்கு மேலான சமுதாய பிரச்சனை. ஆனால், 60 ஆண்டுக் காலமாக ஆட்சியில் இருந்தவர்களுக்கு இது தெரியாமல் போனது ஆச்சரியம். அன்று எந்த முயற்சியும் எடுக்காததால் தான் இன்று இந்த ஆலய பிரச்சனை பூதாகரமாக மாறியுள்ளதை இந்த இந்திய சமுதாயம் நன்கு அறியும்.

ஆலயங்களைக் காக்கப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு பல முயற்சிகளை எடுத்து, பின்னர் ஆலய இடமாற்றம் நடந்தால் அது ஆகம விதிப்படி முறையாக நடக்க வேண்டும் என்று முழு முயற்சியில் களம் இறங்கியுள்ள மலேசிய இந்து சங்கத்தை தனது சுய விளம்பரத்திற்காக சிலர் குறைக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதோடு மலேசிய இந்து சங்கத் தேசியத் தலைவர் ஶ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ்.மோகன் ஷான்னைப் பதவி விலக சொல்ல அவர்களுக்கு சற்றும் அருகதை கிடையாது.

மேம்பாட்டாளர் மற்றும் இரு தரப்பு ஆலய நிர்வாகத்துடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு இன்று ஆலயப் பிரச்சனைக்கு சுமூக தீர்வு கண்டுள்ளது மலேசிய இந்து சங்கம். ஆனால் கடந்த 60 ஆண்டுக்கால ஆட்சி எனும் வரலாற்றைக் கொண்ட கட்சியில் முக்கிய பதவி வகிக்கும் சிலர் ஆலயங்களைக் காக்க என்ன செய்தனர் என்பது கேள்விக்குறி. உண்மையில் ஆலயத்தைக் காக்க தவறிய இவர்கள் தான் பதவியை விட்டு விலகி இருக்க வேண்டும்.

தமிழ்ப்பள்ளிகள், ஆலயங்கள் மற்றும் இடுகாடுகளுக்கு என வழங்கப்பட்ட நிலங்கள் என்னவாகின? சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு சென்றடைந்ததா? இல்லை அவையாவும் சிலரால் சூறையாடப்பட்டதா என்பதை இந்த சமுதாயம் நன்கு அறியும். சமுதாயத்தில் நிலவும் பிரச்சனைகளைத் தொடக்கத்திலேயே பல அரசு சாரா அமைப்புகள் முன்வைக்கும் போது அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவர்களை மதிப்பதே கிடையாது. சுயமாக பிரச்சனைகளைத் தீர்க்க முயலும்போது மட்டும் குறை கூறுவது ஏனோ?

மலேசிய இந்துக்களின் எதிர்காலத்தினைக் கருத்தில் கொண்டு ஆலயங்களைக் காக்க பெரும் முயற்சிகளை எடுத்து வரும் மலேசிய இந்து சங்கத்தையும் அதன் தேசியத் தலைவரையும் குறைக் கூறுவதை சில தரப்பினர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என அதன் தேசியக் கௌ. பொதுச் செயலாளர் சங்கபூசன் த.கணேசன் தெரிவித்தார்.

You may also like...