மாண்புமிகு செனட்டர் பொன்.வேதமூர்த்தி பதவி விலக அவசியமில்லை

டிசம்பர் 22- சீபில்டு ஆலயத்தில் நடந்த கலவரத்திற்கு பொறுப்பேற்று அமைச்சர் பொன்.வேதமூர்த்தி பதவி விலக வேண்டும் என்று கூறுவது அவசியமற்றது என மலேசிய இந்து சங்கம் தெரிவித்துக் கொள்கிறது. பிரதமர் துறையின் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக மாண்புமிகு செனட்டர் பொன்.வேதமூர்த்தியே தொடர்ந்து நீடிக்க மலேசிய இந்து சங்கம் தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

நாட்டில் ஒற்றுமை மேம்பட, பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அவர்கள், செனட்டர் வேதமூர்த்திக்கு தனது பிரதமர் துறையிலேயே அமைச்சர் பதவியைக் கொடுத்து, நாட்டில் நல்லிணக்கமும் சமுதாய மறுமலர்ச்சியும் மேலும் வலுப்படுத்தும் கடமையை ஒப்படைத்துள்ளார்.

தனது பணியைச் செவ்வனே செய்து வரும் மாண்புமிகு செனட்டர் பொன்.வேதமூர்த்தி மீது அவதூறு பரப்பி, சீபில்டு ஆலய பிரச்சனையை வேறு விதமாக சித்தரித்து அவரை அமைச்சர் பதவியிலிருந்து விலக சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆலயத்தில் நடந்த கலவரத்தின்போது பணியில் ஈடுப்பட்டிருந்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப் கடுமையாக காயமடைந்ததும் பின்னர் மரணமடைந்ததும் துயரமான சம்பவம். அச்சம்பவங்களால் மலேசிய இந்து சங்கம் வருத்தம் கொள்கிறது. ஆனால், அச்சம்பவங்களைக் காரணம் காட்டி சிறப்பாக சேவையாற்றி வரும் அமைச்சர் வேதமூர்த்தியை பதவி விலக சொல்வது நியாயமானது அல்ல.

Description: 27024B1F

நாட்டின் நல்லிணக்கத்திற்கும் இந்து சமய விவகாரங்களுக்கும் பொறுப்பேற்றுள்ள அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தொடர்ந்து அமைச்சராக நீடிக்க மலேசிய இந்து சங்கம் ஆதரவு தெரிவிப்பதோடு மலேசிய இந்துக்களும் இதற்கு முழுமையான ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

You may also like...