ஆலயங்களை மீண்டும் திறத்தல்; அதற்கான SOP

வணக்கம். மேற்குறிப்பிடப்பட்டுள்ளதன்படி, கடந்த 22 மே 2020 ஒற்றுமைத்துறை அமைச்சு வெளியிட்ட செயல்பாட்டு தர விதிமுறை (Ref. No. KPN. 100-1/11/(4) தொடர்பில் இக்கடிதம் வெளியிடப்படுகிறது.

எதிர்வரும் 10 ஜூன் 2020ஆம் தேதி தொடங்கி பச்சை மண்டலங்களில் உள்ள இந்து ஆலயங்கள் உட்பட முஸ்லீம் அல்லாத வழிப்பாட்டுத் தளங்களை மீண்டும் திறப்பது குறித்து கடந்த 21 மே 2020 ஒற்றுமைத்துறை அமைச்சு பத்திரிகை செய்தியை வெளியிட்டது. இந்த முடிவானது அன்றைய தினம் நடந்த சிறப்பு அமைச்சர்கள் குழு சந்திப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவாகும்.

முஸ்லீம் அல்லாத வழிப்பாட்டுத் தளங்கள் மீண்டும் திறப்பது மீதான கலந்துரையாடலில் ஈடுப்பட்டு அனுமதி பெற முயற்சி செய்த ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஹலிமா சாடிக் அவர்களுக்கு மலேசிய இந்து சங்கம் தனது மனமார்ந்த நன்றினைத் தெரிவித்துக் கொள்கிறது.

கடந்த 21 மே 2020ஆம் தேதி அறிவிக்கப்பட்டது போல், இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள பச்சை மண்டலத்தில் உள்ள மொத்தம் 84 இந்து ஆலயங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும், பச்சை மண்டலங்களில் உள்ள மற்ற ஆலயங்களின் பெயர்களையும் ஜூன் மாத ஆரம்பத்தில் முன்மொழிய இந்து சங்கத்திற்கு ஒற்றுமைத்துறை அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

இக்கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ள 22 மே 2020ஆம் தேதி ஒற்றுமைத்துறை அமைச்சு வெளியிட்ட அதிகாரப்பூர்வ செயல்பாட்டு தர விதிமுறையின் அடிப்படையில், 10 ஜூன் 2020ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் திறக்கப்படும் இந்து ஆலயங்கள், பக்தர்களுக்கு வாரத்தில் இருநாட்கள் மட்டுமே அதாவது வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே திறக்கப்படும் என்பதை மலேசிய இந்து சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.

திறக்கப்படும் ஆலயங்கள் ஒற்றுமைத்துறை அமைச்சு வெளியிட்ட கடுமையாக்கப்பட்ட செயல்பாட்டு தர விதிமுறைகளுக்கு உட்பட்டதாகும். இதனை அடுத்து, மலேசிய இந்து சங்கம் ஆலய நிர்வாகத்தினருடன் கலந்து ஆலோசித்து, ஆலயங்களைத் திறக்கும் முன் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை உள்ளடங்கிய விரிவான செயல்பாட்டு தர விதிமுறையை (இக்கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது) தயார் செய்துள்ளது. அதேவேளையில், தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு வெளியிட்ட கடிதத்தின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆலயங்களில் செயல்பாட்டு தர விதிமுறைகள் பின்பற்றுதல் தொடர்பில் அமைச்சின் அதிகாரிகளும் தேசிய ஒற்றுமைத்துறை மற்றும் ஒருமைப்பாட்டு இலாகாவும் கண்காணிப்பு மேற்கொள்வர்.

மேலும், கோவிட் 19 நச்சில் பெருந்தொற்றின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு 31 ஜூலை 2020ஆம் தேதி வரை அல்லது அதிகாரிகளின் அறிவிப்பு வரும் வரை ஆலயங்களில் திருமண வைபவங்கள் நடத்துவதை ஒத்தி வைக்க வேண்டும் என மலேசிய இந்து சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.

நாடளாவிய அளவில் மீண்டும் திறக்கப்படவுள்ள இந்து ஆலயங்கள் உட்பட அனைத்து வழிப்பாட்டுத் தளங்களைக் கண்காணிக்க தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு மாநில அரசாங்கங்கள், ஊராட்சி மன்ற அதிகாரிகள் மற்றும் போலீஸ் துறையுடன் இணைந்து பணியாற்றும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

மலேசியா இந்து சங்கம் இந்த நாட்டில் உள்ள அனைத்து இந்துக்கள் மற்றும் இந்து ஆலயங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பெருமை கொள்கிறது. மேலும் இந்த இக்கட்டான காலங்களில் அனைத்து இந்து ஆலயங்களுக்கும் சிறந்ததை செய்ய உறுதி கொண்டுள்ளது. எனவே, நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு தர விதிமுறைக்கு ஏற்ப ஆலயம் செயல்படுவதை உறுதிச்செய்ய மலேசிய இந்து சங்க மாநில பேரவை மற்றும் வட்டாரப் பேரவைகளுடன் இணைந்து செயல்பட ஆலய நிர்வாகங்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இவ்வேளையில், மலேசிய இந்து சங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் அனைத்து ஆலயத் தலைவர்களுக்கும் மலேசிய இந்து சங்கம் மனமார்ந்த நன்றினைத் தெரிவித்துக் கொள்கிறது.

You may also like...

1 Response

  1. S.THIRUNAVUKKARASU says:

    Tq for the information. May God blesses you and your family always.