ஆலயங்கள் இன்னும் திறக்கப்படவில்லை!
19.10.2020 –
நிபந்தனைக்குட்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சிலாங்கூர், புத்ராஜெயா, கோலாலம்பூர் மற்றும் சபா ஆகிய இடங்களில் உள்ள ஆலயங்களுக்கு செல்ல குருக்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் உட்பட 6 பேருக்கு மட்டுமே அனுமதி உண்டு. பக்தர்களின் வழிப்பாட்டுக்கு ஆலயங்கள் இன்னும் திறக்கப்படவில்லை என்பதை மலேசிய இந்து சங்கம் மீண்டும் நினைவுறுத்தி கொள்கிறது.
அண்மையில், கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதியில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் நவராத்திரி விழாவை ஒட்டி 20 பேர் கலந்து கொள்ளலாம் எனும் செய்தி வெளிவந்தது. அது உண்மையல்ல.
மாறாக, ஒற்றுமைத்துறை அமைச்சு, ஶ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் துன் எச்.எஸ்.லீ ஶ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்திற்கும் கோர்ட்டுமலை ஶ்ரீ கணேசன் ஆலயத்திற்கும் மட்டுமே 20 பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.
மலேசிய இந்து சங்கம், அரசாங்கத்திடம் மற்ற ஆலயங்களிலும் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி கோராமல் இருந்ததற்கு காரணம் தற்போதைய கணிக்க இயலாத சூழ்நிலையும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுக்காப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதாலும் தான்.
நாட்டில் கோவிட்-19 நச்சில் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருகிறது. புதிதாக பல தொற்று மையங்களும் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. இதற்கு முன்னர் மற்ற வழிப்பாட்டு தளங்களிலும் தொற்று அடையாளம் காணப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்நிலையில், இக்காலக்கட்டத்தில் குறிப்பாக நவராத்திரி விழா காலத்தில் ஆலயங்கள் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த இயலாத சூழ்நிலை ஏற்படலாம். இதற்கு முன்னர், புரட்டாசி விரதங்களின் போது ஆலயங்களில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கை காட்டிலும் அதிக அளவில் பக்தர்கள் கூடியது இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே, நமது ஆலயங்களில் தொற்று சம்பவங்கள் ஏற்படாமல் இருக்கவும் 20 பேருக்கு அனுமதி எனில், யாரை அனுமதிப்பது என்பதில் குழப்பமும் மன கஷ்டமும் ஏற்படாமல் இருக்கவும், குறிப்பாக, பக்தர்களின் நன்மையைக் கருதியே அனுமதி கேட்டு இம்முறை விண்ணப்பம் செய்யப்படவில்லை.
சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் இந்துக்கள் சூழ்நிலை அறிந்து தங்கள் இல்லத்திலேயே நவராத்திரி பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்தரவு பிறப்பிக்கப்படாத மாநிலங்களில் நவராத்திரி விழா மிதமான அளவில் கொண்டாடப்பட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது. தேசிய பாதுகாப்பு மன்றத்தின் ஆலோசனைப்படி மலேசிய இந்து சங்கம் அறிவித்த செயல்பாட்டு தர விதிமுறைகளைப் பின்பற்றி ஆலயங்கள் நவராத்திரி விழாவை நடத்தி வருவது சிறப்பு.
பொதுமக்களுக்கு திறக்கப்படாத ஆலயங்களில் நவராத்திரி விழாவை ஒட்டி, பக்தர்கள் உபயம் ஏதும் எடுத்திருந்தால், ஆலயத்தின் நலனைக் கருத்தில் கொண்டு அப்பணத்தை மீண்டும் கோராமல் இருப்பது நலம். அதோடு, ஆலய நிர்வாகத்தினர், உபயத்திற்கான பூஜையை நடத்தி அதற்கான பிரசாதத்தை உபயக்கார்களிடம் வழங்கும்படி மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.
நாட்டில் மீண்டும் தலைத்தூக்கியுள்ள நச்சில் பெருந்தொற்றை துடைத்தொழிக்க நம் அனைவரின் பங்கும் மிக அவசியம். நமக்கு பாதிப்பில்லை என அலட்சியம் கொண்டால், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நமக்கு மட்டுமல்ல நம்மை சுற்றியுள்ளவர்களுக்கும் அது தீமையை உருவாக்கி விடும். வருமுன் காப்போம்; வந்தப்பின் வருந்தி பயன் இல்லை.