இந்து மயானத்தில் மாந்திரிகமா?

22 டிசம்பர் 2020-

இந்து மயானங்களை பாதுக்காக்க வேண்டிய கடப்பாடு இந்துக்களான நம் அனைவருக்கும் உண்டு என்பதை பராமரிப்பு இயக்கங்களும் பொதுமக்களும் மறந்து விட கூடாது என மலேசிய இந்து சங்கம் அறிவுறுத்துகிறது.

தைப்பிங், கம்போங் ஜிபோங்கில் உள்ள இந்து மயானத்தில் அத்துமீறி நுழைந்து புதைக்குழிகளைத் தோண்டி, சில வகை உணவு பொருட்களைப் புதைத்து வைத்த சம்பவம் நடந்தேறியுள்ளது கண்டு மலேசிய இந்து சங்கம் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.

நாட்டில் உள்ள இந்து மயானங்களை அதற்கான தனி இயக்கங்களும் சில ஆலயங்களும், பராமரித்து வருகின்றன. இந்நிலையில், அண்மைய காலமாக மாந்திரிக காரியங்கள் செய்யும் இடமாக மயானங்களை ஒரு சில தரப்பினர் பயன்படுத்தி வருவதைக் கண்டு இந்து சங்கம் வருத்தம் கொள்கிறது.

பல நாட்களாக கம்போங் ஜிபோங்கில் உள்ள ஓர் ஆலயத்தில் பல மாந்திரிக மாய பூஜைகள் செய்யப்பட்டு அந்த உணவு பொருட்களைப் பக்கத்தில் இருந்த மயானத்தில் புதைக்கப்பட்ட கல்லறையைத் தோண்டி புதைத்ததைக் கண்டு அங்குள்ள வட்டார மக்கள் ஆவேசம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் நடந்தேறியதற்கான முழு பொறுப்பையும் பின்விளைவுகளையும் சம்பந்தப்பட்டவர்களும் மயானத்தைப் பாரமரிக்கக்கூடிய நிர்வாகத்தினரும் தான் ஏற்க வேண்டும்.

மயானத்தைப் பராமரிக்க பொறுப்பேற்றுள்ள ஆலயங்களும் இயக்க நிர்வாகங்களும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள மயானங்கள் சரியாக பராமரிக்கப்படுவதையும் இது மாதிரியான தவறான சம்பவங்கள் ஏதும் நடக்காமல் இருப்பதையும் உறுதிச் செய்ய வேண்டும். இல்லையேல், கேட்பாரற்று கிடக்கும் இடங்களில் தவறான காரியங்கள் நடக்க நாமே வழிவிடுவது போல் ஆகிவிடும்.

அதுமட்டுமின்றி, தற்போது மயானத்தில் கல்லறைக்கு மேல் ஆலயங்களை அமைத்து வருவதும் பரவலாக நடந்து வருகிறது. இந்நாட்டில் கல்லறைகள் மீது ஆலயம் போன்று கட்டுவது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. எனவே, இச்செயலை உடனடியாக பொதுமக்கள் நிறுத்தி கொள்ள வேண்டும் என்பதோடு மயான பராமரிப்பு பொறுப்பாளர்கள் இவ்விசயங்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என மலேசிய இந்து சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.

என்றும் இறைச் சேவையில்,

ஶ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் PMW.,JMW.,AMK.,BKM.,PJK

தேசியத் தலைவர்,

மலேசிய இந்து சங்கம்

You may also like...