வேற்றுமைகள் வெறுப்பதற்கு அல்ல; வேற்றுமையிலும் ஒற்றுமைக் காணுவோம்!

மலேசியா அந்நிய ஆட்சியிடமிருந்து சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் ஆகிவிட்டது. சுதந்திர பெறுவதற்கான போராட்டமும், இந்த 64 ஆண்டுகள் நாடு அடைந்த வளர்ச்சியையும் எண்ணி, அதற்காக தனது ரத்தத்தையும் வியர்வையையும் சிந்திய மலேசியர்கள் பெருமிதத்தோடு கொண்டாட வேண்டிய சுதந்திர தினத்தைப் போற்றுவோம்; கொண்டாடுவோம்.

தற்போது நாடு கோவிட்-19 எனும் அரக்கனால் பெரும் அவதியைச் சந்தித்து வருகிறது. இந்த நச்சில் பெருந்தொற்றினால் நாட்டில் இதுவரை 15,000-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது. இவ்வேளையில், மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு மலேசிய இந்து சங்கம் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

நாடு எதிர்நோக்கியுள்ள இக்கட்டான சூழ்நிலை விரைந்து கடக்க வேண்டும் எனில் நமக்கு ஒற்றுமை மிக அவசியம். மத, இன, மொழி என வெவ்வேறாக காணப்பட்டாலும், மலேசிய குடிமக்கள் என்ற அடிப்படையில் இந்த வேற்றுமைகள் நமக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தவில்லை. மாறாக இந்த வேற்றுமைகளே நமக்கு ஒற்றுமையை உணரும் மனப்பக்குவத்தை விதைத்தது எனலாம்.

உண்மையில், பிரிவினைகள் மொழியாலோ, சமயத்தினாலோ ஏற்படவில்லை. மாறாக, சுய லாபத்திற்காக இன உணர்வுகளையும் தன்மான உணர்வுகளையும் சர்ச்சையாக்கி கொண்டிருக்கும் விஷமிகளினாலேயே ஏற்படுகிறது. இதனை உடனடியாக களையெடுக்காவிட்டால் பாதிப்பு ஒட்டு மொத்த மலேசியர்களுக்கும் தான் என்பதை நாம் உணர்தல் அவசியம். சுதந்திரத்தைப் பெற நம் முன்னோர்கள் நடத்திய போராட்டங்களை நினைவில் கொள்வோம். வேற்றுமையிலும் ஒற்றுமைக் காணும் மலேசியர்கள் எனும் அடையாளத்தை இழக்காமல் பாதுகாப்போம். மலேசியர்கள் அனைவருக்கும் மலேசிய இந்து சங்கத்தின் 64ஆம் ஆண்டு தேசியத் தின வாழ்த்துகள்.

You may also like...