லோ சியூ ஹோங்கிடம் பிள்ளைகளை ஒப்படைக்க உத்தரவு: நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது

21.02.2022-

தன் மூன்று பிள்ளைகளையும் தன் வசம் ஒப்படைக்கக்கோரி தனித்து வாழும் தாயான லோ சியூ ஹோங் தொடுத்திருந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் பிள்ளைகளை மீண்டும் தாயாரிடமே ஒப்படைக்கும்படி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன்வழி, நீதி நிலைநாட்டப்படுள்ளதாக மலேசிய இந்து சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.

இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்ட இந்த ஆட்கொணர்வு மனுவை ஏற்றுக் கொண்டு இத்தீர்ப்பை வழங்கிய நீதிபதி கோலின் லாரன்ஸ் செகியூரா அவர்களுக்கு மலேசிய இந்து சங்கம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. இன்றைய வழக்கு விசாரணையில் ராஜ் & சாஜ் கிளைன்ட்ஸ் சேர்ந்த வழக்கறிஞர் திரு.ராஜேஸ் அவர்கள் மலேசிய இந்து சங்கம் சார்பாக அதிகாரப்பூர்வ பார்வையாளராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிள்ளைகளை மீண்டும் ஒப்படைக்கும்படி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது உண்மையில் தனித்து வாழும் தாயான லோ சியூ ஹோங்கின் பெரும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். இவ்வேளையில், தன் பிள்ளைகள் மதமாற்றம் செய்யப்பட்டது குறித்து லோ உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவுள்ளதாக அறியப்படுகிறது. இதற்கு மலேசிய இந்து சங்கத்தின் உதவியை நாடி வந்தால் அவருக்கு முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்க இந்து சங்கம் தயாராக உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறது.

அதேவேளையில், நாட்டில் பெற்றோரில் இருவரில் ஒருவருக்கு தெரியாமல் மதமாற்றம் செய்யப்படும் ஒருதலைப்பட்சமான மதமாற்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஒருதலைப்பட்சமாக மதமாற்றம் செய்ய அனுமதிக்கும் மாநிலச்  சட்டங்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மலேசிய இந்து சங்கம்  விரைவில் வழக்கு ஒன்றை தொடர முடிவெடுத்துள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறது.

You may also like...