விநாயகர் சதுர்த்தி விழாவும் 65வது சுதந்திர தினக் கொண்டாட்டமும்– பக்திநெறியோடும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடுவோம்

30 ஆகஸ்டு 2022-

நாம் நாளை 31.08.2022ஆம் தேதி, நாட்டின் 65வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் அதேவேளையில் இந்துக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவையும் கொண்டாடவிருக்கிறோம். சுதந்திரக் காற்றை மகிழ்ச்சியாக கொண்டாடும் அதேவேளையில், விநாயகர் சதுர்த்தி விழாவை பக்தி நெறியோடு கொண்டாடும்படி மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.

65வது சுதந்திர தினம் என்பது வெறும் விடுமுறை தினமல்ல. 65 ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் மட்டுமே முன்னிருத்தி அந்நிய ஆட்சியிலிருந்து மீள நடத்தப்பட்ட போராட்டத்தின் வெற்றி மகுடமே இந்த சுதந்திர தினம். இந்நன்னாளில் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதோடு சுதந்திரத்திற்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் தியாகம் செய்தவர்களையும் நமக்காக இரத்தம், வியர்வை சிந்தியவர்களையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

அதேவேளையில், விநாயகர் சதுர்த்தி பொது விடுமுறை நாளிலே வருவதால், இந்துக்கள் சதுர்த்தி விழாவை பக்திநெறி தவறாது மகிழ்ச்சியாக கொண்டாடுவோம். கடந்த காலங்களில் சுதந்திர தின நாளில் நாட்டின் சுபிட்சத்திற்காக சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இம்முறை விநாயகர் சதுர்த்தியோடு சுதந்திர தின சிறப்பு பூஜைகளையும் மேற்கொள்ளும்படி ஆலயங்களை இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.

நாட்டில் மக்களிடையே அவ்வப்போது ஏற்படும் சர்ச்சைகள் மொழியாலோ, சமயத்தினாலோ ஏற்படவில்லை. மாறாக, சுய லாபத்திற்காக இன உணர்வுகளையும் தன்மான உணர்வுகளையும் சர்ச்சையாக்கி கொண்டிருக்கும் விஷமிகளினாலேயே ஏற்படுகிறது. இதனை உடனடியாக களையெடுக்காவிட்டால் பாதிப்பு ஒட்டு மொத்த மலேசியர்களுக்கும் தான் என்பதை நாம் உணர்தல் அவசியம்.

அதே வேளையில் அரசாங்கமும் அரசியல்வாதிகளும் மக்களின் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். சுயநலம் இல்லாமல் மக்கள் குறித்த சிந்தனையோடு அனைவரும் செயலாற்ற வேண்டும் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது. அனைவருக்கும் மலேசிய இந்து சங்கத்தின் 65ஆம் ஆண்டு சுதந்திர தின வாழ்த்துகள்.

You may also like...