‘ஐயா பானம்’ சைவ மது என பிரச்சாரம்; இந்து சமயத்திற்கு ஏற்புடையதல்ல!

03 ஆகஸ்டு 2023-

மது என்றாலே மயக்கம் தரக்கூடியதுதான். இதில் சைவம், அசைவம் என்று வகைப்படுத்துவது போலியான கருத்தாகும். அண்மைக் காலமாக ‘ஐயா பானம்’ என்னும் புது வகை மது விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இது சைவ பானம் என்ற பெயரில் வானொலி உள்ளிட்ட தகவல் ஊடகங்களில் பிரச்சாரம் செய்வதற்கு மலேசிய இந்து சங்கம் மறுப்பு தெரிவிக்கிறது என்று மலேசிய இந்து சங்க தேசியத் தலைவர் ஶ்ரீகாசி சங்கபூசன் தங்க. கணேசன் தெரிவித்தார்.

இந்து சமய அன்பர்களில் ஒருசில தரப்பினரால், சிறுதெய்வ வழிபாடு பரந்த அளவில் முன்னெடுக்கப்படுகிறது. இந்த வழிபாட்டு முறை, இந்து சமயத்தின் ஆறு கொள்கைகளில் வரையறுக்கப்படவில்லை என்றாலும் இன்று நடைமுறையில் இருப்பது உண்மைதான்; அதைப்போல, சிறுதெய்வ வழிபாட்டு முறை குறித்து சமய சான்றோரிடையேயும் மாறுபட்ட கருத்து நிலவுவதால், இந்த வழிபாட்டு முறை தொடர்கிறது.

இருந்தபோதும் முனியாண்டி சாமி, கருப்பண்ண தெய்வம் போன்ற சிறுதெய்வங்களுக்கு விலங்குகள் பலியிடுவதையும் சுருட்டு, மது ஆகியவற்றைக் கொண்டு படையல் இடுவதையும் ஏற்க முடியாது. இது, நமது பாரம்பரிய சைவ வழிபாட்டு முறைக்கு ஏற்புடையதன்று என்று மலேசிய இந்து சங்கம் நெடுங்காலமாக அறிவுறுத்தி வருகிறது.

போதாக் குறைக்கு, இப்பொழுது ‘ஐயா பானம்’ சைவ மது என்று பெயரில் விளம்பரம் செய்வதையும் இதை ஆன்மீக நெறியுடன் தொடர்புபடுத்துவதையும் கண்டு இந்து சங்கம் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.

சமயம் என்பது மனிதனை பக்குவப்படுத்தும் நெறி என்பதை உணராமல், அசைவ உணவுடன், மது மற்றும் சுருட்டு போன்றவற்றுடன் வழிபடும் சிறு தெய்வ வழிபாட்டிரை மேலும் கெடுக்கும் விதமாக ஐயா பானத்தை விற்கின்றவர்கள் விளம்பரம் செய்யும் போக்கு கண்டனத்திற்கு உரியது.

திருமந்திரம் என்னும் பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழார் பெருமான், ஆன்மீக எல்லையில் மதுப்பழக்கத்திற்கு இடமில்லை என்பதை தெளிவாக வரையறுத்து பாடலையும் இயற்றி உள்ளார். பாதை மாற்றும் போதைக்கு இந்து சமயத்தில் இடமில்லை.

இதன் அடிப்படையில் ஐயாபானம் என்ற பெயரில் விற்கப்படும் மது வகை கண்டிப்பாக நம் சமயக் கொள்கைக்கு ஏற்புடையதல்ல.

மயக்குஞ் சமய மலமன்னும் மூடர்

மயக்கும் மதுவுண்ணும் மாமூடர் தேறார்

மயக்குறு மாமாயை மாயையின் வீடும்

மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே

என்னும் திருமந்திரப் பாடலே இதற்கு தக்க சான்றாகும். சிறுதெய்வ வழிபாட்டினர் தங்களின் ஆன்மீகப் பயணத்தில் சைவமுறையைக் கையாள வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றுவரும் இந்த நேரத்தில், ஐயாபானம் சைவ மது என்று விளம்பரம் செய்வது அடியோடு நிறுத்தப்பட வேண்டும் என்று மலேசிய இந்து சங்கம் வலியுறுத்துவதாக தங்க. கணேசன் தெரிவித்துக் கொண்டார்.

You may also like...