Kanda Puranam – Part 10

 

கலியுகத் துன்பத்தைத் தீர்க்கவல்ல கந்த புராணம் – 10

‘பழிக்குப் பழி’ எனும் கொள்கையை விட்டொழிப்பதே வினைப்ப யனிலிருந்து விடுபடுவதற்கு வழி!

‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்று பாடுவார் மாணிக்க வாசகர். ‘என் செயலாவது ஒன்றில்லை; எல்லாம் நின் செயல்’ என்னும் தெளிவினால் ஏற்படும் பணிவான, பக்திபூர்வமான வழிபாட்டினாலும் முயற்சியினாலுமே இறைவன் அருளைப் பெற முடியும். நம் முயற்சியாலும் அறிவினாலும் இறையருளைப் பெறவோ, அவனை முழுமையாக அறிந்து உணரவோ முடியாது.இந்த அரிய உண்மையைக் ‘குன்றிலிட்ட விளக்கென’ விளக்கமாய் உணர்த்துகிறது, கந்தபுராண உற்பத்திக் காண்டத்தில் ஐந்தாவதாக இடம்பெற்றுள்ள ‘மோன நீங்கு படலம்’.

சூரபன்மனின் கொடுமையிலிருந்து பிரமாதி தேவர்களைக் காப்பதற்கு, முருகப் பெருமானைத் தோற்றுவித்தருளுவதாக இந்திரனிடம் கூறிய சிவபிரான் நிட்டையில் ஆழ்ந்துவிட்டார். அவரது நீண்ட நிட்டையைக் கலைப்பதற்காக அனுப்பப்பட்ட மன்மதன், பொடிபட்டுப் போனான்; சிவபெருமானோ மீண்டும் நிட்டையில் ஆழ்ந்துவிட்டார். பிரமாவும் தேவர்களும் செய்வதறியாது தவித்தார்கள்; அஞ்சி நடுங்கினார்கள்; சிவபெருமானின் மௌன நிலையைத் தங்கள் சூழ்ச்சித் திறத்தினால் கலைக்க முடியாது என்றும், அவரை மனமுருகி வழிபட்டு வேண்டுவதே பலன் அளிக்கும் என்றும் உணர்ந்து, கைலை மலைக் கோபுரத்தின் புறத்தே நின்று, சிவபெருமானைப் பலவாறு போற்றித் துதித்து வேண்டினார்கள்.

தேவர்கள் மனமுருகி வேண்டுவதைக் கண்ட இறைவன், அவர்களுடைய பாவம் தீருவதற்குரிய காலம் நெருங்குவதை அறிந்து, தேவர்களைத் தம் முன்பு அழைத்து வருமாறு நந்திதேவரைப் பணித்தார். நந்திதேவருடன் உள்ளே வந்த பிரமா முதலிய தேவர்களின் தேவை என்னவென்று இறைவன் கேட்கவே, பல யுகங்கள் தாங்கள் சூரபன்மனால் துன்பமடைவதைக் கூறி, இமயமலையில் தவம் செய்யும் பார்வதிதேவியாரை மணம்புரிந்து தங்களைக் காத்தருள வேண்டும் என்று வேண்டினார்கள். இறைவனும் அவர்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதாகக் கூறியருளினார். இறைவன் தேவியை மணப்பது என்பது, இறைவன் தன் அருட்சக்தியை வெளிக்கொணர்ந்து, உயிர்களுக்கு அருள்புரியும் நிலையைக் குறிக்கும் என்பதை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

இதைக் கண்ட இரதிதேவி, இறைவனை வணங்கி, “தேவர்களின் தூண்டுதலால்தான் என் கணவர் தங்கள்மீது மலர்க்கணையை எய்து அழிந்தார்; அவர் குற்றத்தை மன்னித்து அடியேனுக்கும் அருள்புரிய வேண்டும்” என்று வேண்டினாள். “பார்வதியை மணம்புரியும்போது மன்மதனை உயிர்ப்பித்துத் தருவோம்” என்று இறைவன் திருவாய் மலர்ந்தருளினார். இரதிதேவி இறைவனை வணங்கி, கைலைமலைச் சாரலில் உண்ணாமலும் உறங்காமலும் தவம் மேற்கொண்டாள்.

சிவபெருமான் சனகாதி முனிவர்களை நோக்கி, “நற்புதல்வர்களே, சிவ அனுபவம் (மெய்யறிவு) என்பது சொற்களால் வருவது அன்று; துயரம் நீங்கி, மௌன நிலையில் இருந்து, நம்மை ஒருமை உணர்வுடன் நினைப்பதே ஆகும்” என்று உரைத்தருளினார்; தொடர்ந்து தட்சிணாமூர்த்தி கோலத்திலிருந்து  எழுந்தார்.  இதுவே, ‘மோன நீங்கு படலம்’ கூறும் விவரம்,நாம் நம்மோடு கொண்டுவந்துள்ள வினைப்பயனுக்கு ஏற்ப நாம் இன்பதுன்பங்களை அனுபவிக்கிறோம் என்பது இந்து சமயம் கூறும் வினைக்கொள்கை. இதை உணர்ந்து நம் அனுபவங்களுக்குக் காரணம் நம்முடைய வினைப்பயன்களே என்றுணர்ந்து, குறிப்பாக துன்பப்படும்போது யாரையும் நோகாமல்,

‘துன்பத்தைச் சமாளிக்கும் தைரியத்தைக் கொடுத்து,  துன்பக்கடலை நீந்துவதற்கு வழிகாட்டுமாறு’ இறைவனிடம் வேண்டிக்கொண்டே, நாம் செய்யவேண்டிய கடமைகளைச் கடப்பாட்டுடன் செய்துவந்தால், நம் தீவினை முடியும்போது, அதனால் எவ்விதக் கடுமையான பாதிப்பும் இல்லாது நாம் நல்ல முறையில் கடைத்தேறுவோம்.  அவ்வாறில்லாமல், அவசரப்பட்டு குறுக்கு வழியையோ, எதிர்மறை வழியையோ கையாண்டு செயலில் இறங்கினால், மன்மதனுக்கு நேர்ந்தது போல் பெருந்துன்பத்தை எதிர்கொள்ள நேரும்.

மொத்தத்தில், ‘இறையருளையும் இறையனுபவத்தையும் தூய உணர்வினாலும் பயபக்தியாலும் அடைந்து பயன் பெறலாமே அன்றி, தூய்மையும் உண்மையும் இல்லாத மனித முயற்சியினால் அல்ல’ என்னும் அரிய உண்மை இந்தப் படலத்தில் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதை நன்கு உணர்ந்து, அதன்படி நடந்து, இம்மையிலும் மறுமையிலும் பயன் பெறுவோம்.