14 மே 2019-
சீபில்டு ஆலயத்தில் நடந்த கலவரத்தின்போது காயமடைந்து பின்னர் மரணமுற்ற தீயணைப்பு வீர்ர் முகமட் அடிப் மரணம் தொடர்பாக பழிவாங்கும் விதத்தில் கும்பல் ஒன்று நாட்டில் உள்ள வழிப்பாட்டுத் தளங்களைத் தகர்க்க திட்டமிடப்பட்டிருந்த சதிச்செயலை அரச மலேசிய போலீஸ் படையினர் முறியடித்ததை அடுத்து, போலீஸ் படைக்கு மலேசிய இந்து சங்கம் தனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
மலேசியர்களின் பாதுகாப்பில் மிகுந்த அக்கறையுடன் செயலாற்றி வரும் போலீஸ் துறை தனது அதிரடி நடவடிக்கையின் வழி நால்வரைக் கைது செய்துள்ள நிலையில், இதில் சம்பந்தப்பட்டுள்ள மேலும் மூன்று பேரைத் தேடி வருவதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில், அசம்பாவிதங்களைத் தவிர்க்க ஆலயங்கள் முழு விழிப்பு நிலையில் இருக்க வேண்டும் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது. நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்ய போலிஸ் துறையினர் போதுமான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், நாம் எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பது சிறந்தது.
குறிப்பாக, திருவிழா மற்றும் பண்டிகைக் காலங்களில் அதிகமான பக்தர்கள் கூடும் சமயத்தில், ஆலயங்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும். அதேவேளையில், பல இன மக்கள் ஒற்றுமையோடும் நல்லிணக்கத்தோடும் வாழ்ந்து வரும் நம் நாட்டில் விரும்பத் தகாத அசம்பாவிதங்கள் ஏதும் நடந்து விடாமல் இருக்க பொதுமக்கள் ஆலயங்களில் கூட்டுப் பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும் என சர்வ சமய மன்றத்தின் தேசியத் தலைவரும் மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவருமான ஶ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ்.மோகன் ஷான் கேட்டுக் கொண்டார்.