07.11.2023
விண்ணகத்தின் அருட்கொடையால் இந்த மண்ணகத்தேவாழும் இந்துப் பெருமக்களாகிய நாம் அனைவரும் சேர்ந்தே திபத் திருநாளின் தீப ஒளியை ஏற்றுவோம் என்று மலேசிய இந்து சங்க தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 12-இல் கொண்டாடப்பட இருக்கும் இவ்வாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், இந்து சமயத்தின் முதன்மைப் பண்டிகையான தீபாவளித் திருநாளுக்குரிய மாண்பை மலேசிய இந்துக்கள் அனைவரும் ஒருசேர்ந்து போற்றுவோம் என்று தங்க கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்த நிலமான இந்த மலேசியத் திருநாட்டில் வாழ்கின்ற நாம், நம் பாரம்பரிய சமயத்தைத் தற்காப்பதில் தொடர்ந்து பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகிறோம். அதனால், முன்னெப்போதைக் காட்டிலும் தற்பொழுது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டி உள்ளது.
மதமாற்ற நடவடிக்கை, வழிபாட்டு தலங்களை சிதைப்பது, சமூக ஊடகங்களில் ஆதியும் அந்தமும் இல்லாத நம் இந்து சமயத்தைப் பற்றி தவறாக சித்தரிப்பது போன்றவற்றை தொடர்ந்து நாம் சந்தித்து வருகிறோம்.
போதாக் குறைக்கு, நம் அன்பர்களின் ஆன்மிக நடவடிக்கையும் வழிபாட்டு முறையும் அவ்வப்பொழுது சமயநெறி பிறழ்ந்தும் பல்லின சமுதாயத்தில் நிலைநாட்ட வேண்டிய நல்லிணக்கத்திற்கு புறம்பாகவும் மற்ற சமயத்தவர் முகம்சுளிக்கும் வண்ணம் கட்டொழுங்கு மீறியும் அமைந்து விடுகின்றன.
இத்தகைய சமயங்களில், பெரும்பாலான அன்பர்களின் கவனமும் பார்வையும் இந்து சமயத்தின்மீதே திரும்புகின்றன; இந்து சமயம் என்ன செய்கிறது என்பதுதான் சம்பந்தப்பட்ட அன்பர்களின் முதல் வினாவாக உள்ளது.
நம் நாட்டில் உள்ள காவல்துறை அரசாங்கத்தின் சார்பில் மாபெரும் கட்டமைப்புடன் செயல்படுகிறது; அலுவலகம், ஆள் பலம், வாகன வசதி, நவீன தொலைதொடர்பு வசதி என எல்லாம் இருந்தும் அன்றாடம் குற்றவியல் சம்பவங்கள் இடம்பெறத்தான் செய்கின்றன; அதற்காக, காவல் துறை என்ன செய்கிறது என எவராவது கேட்டால், அது பொருத்தமாக இருக்குமா?
எனவே, நம் சமயத்திற்கு எப்பொழுது அரணாக விளங்க வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு இந்துவிற்கு உண்டு என்பதை அனைத்து இந்து சகோதரர்களும் உணர்ந்து, இணைந்து செயல்பட்டால், நம் சமயத்தை நாம் எந்நாளும் தற்காக்கலாம் என்பதை இந்த ஆண்டு தீபாவளி சிந்தனையாக உங்கள் முன்வைத்து, வழக்கமான உற்சாகத்துடனும் பாரம்பரியத் தன்மையுடனும் இவ்வாண்டு தீபாவளியைக் கொண்டாடுவோம்.
2012-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அப்போதைய தேசிய முன்னணி ஆட்சியில் ‘பிரிம்’ உதவித் தொகை வழங்க ஆரம்பித்ததில் இருந்து, பொருட்களின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவது, பொதுமக்களுக்கு பெரும் சுமையாக இருக்கிறது.
இதன் விளைவாக, தற்பொழுது பண்டிகைக் காலத்தில் இந்துக் குடும்பங்களும் பொருளாதார சங்கடத்தை எதிர்கொண்டுள்ளன. இருந்தாலும், தேவையான செலவை மட்டும் மேற்கொண்டு, சற்று சிக்கனத்தை கடைப்பிடித்து வழக்கமான உற்சாகத்துடனும் அதேவேளை சமூக ஒருங்கிணைப்பை நிலைநாட்டும் வகையில் அண்டை-அயலார் உள்ளிட்ட மலாய்-சீன சமுதாய மக்களுடன் ஒன்றுகூடி இந்த ஆண்டு தீபாவளித் திருநாளை கொண்டாடி மகிழ்வோம் என்று ‘சங்கபூஷன்-ஸ்ரீகாசி’ தங்க கணேசன் தன்னுடைய தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மலேசிய இந்து சங்க தேசியப் பேரவை சார்பில் அனைவருக்கும் தீபத் திருநாள் வாழ்த்து!!