23 மார்ச் 2020 –
கொரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்று நோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பிறப்பித்த நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை நாட்டில் உள்ள அனைத்து ஆலயங்களும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என மலேசிய இந்து சங்கம் அறிவுறுத்துகிறது.
நாட்டில் கோவிட்-19 தொற்றால் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 10க்கும் மேற்பட்ட இறப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்நோயின் கொடுமை அறிந்து இதன் பரவலைக் கட்டுப்படுத்தவே கடந்த 18 மார்ச் 2020ஆம் தேதி அரசாங்கம் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையைப் பிறப்பித்தது.
இதனை ஒட்டி, மலேசிய இந்து சங்கம் ஆலயங்களுக்கு ஆலோசனை கடிதம் ஒன்றினை வெளியிட்டது. அதில், ஆலயங்களில் குருக்கள் மட்டுமே நித்திய பூஜையை நடத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் சிறப்பு பூஜைகள் ஏதும் நடத்த கூடாது எனவும் மிக தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆயினும், சில ஆலயங்கள் அரசாங்கத்தின் ஆணையை மீறி சிறப்பு பூஜைகளை நடத்துவதாகவும் அதில் பொதுமக்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் மலேசிய இந்து சங்கத்திற்கு புகார்கள் வந்துள்ளன.
இறப்புகள் உள்ளடக்கிய இந்த கோவிட் 19 தொற்று நோய் மேலும் பரவாமல் தடுக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கையை அனைவரும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும். இதில் எந்த ஆலயங்களும் விதி விலக்கல்ல. மீறி செயல்படும் ஆலயம் மீதும் அதன் நிர்வாகம் மீதும் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம்.
நாட்டு மக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கோவிட் 19 தொற்று நோயைக் களைய அனைவருடைய பங்கும் மிக மிக அவசியம். ஒரு சிலரின் அலட்சிய போக்கு நம் அன்புக்குரியவர்களின் உயிருக்கும் ஆபத்தை உண்டாக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.
என்றும் இறைச்சேவையில்,
ஶ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் PMW.,JMW.,AMK.,BKM.,PJK
தேசியத் தலைவர்,
மலேசிய இந்து சங்கம்