பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்டு 10-
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பயிலும் நான்காம் ஆண்டு பாடபுத்தகத்தில் அரபு சித்திர மொழி அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுவதை மலேசிய இந்துக்கள் முற்றாக எதிர்க்கின்றனர் என்பதோடு மலேசிய கல்வி அமைச்சர் மஸ்லி மலிக் பதவி விலக வேண்டும் என மலேசிய இந்து சங்கம் வலியுறுத்தியது.
கல்வி அமைச்சராக அவர் பொறுப்பேற்றது முதல் சமய ரீதியிலான பல விவகாரங்கள் கல்வித்துறையில் தலைதூக்கியுள்ளன. அவர் கல்வி அமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்னதாகவே அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தில் அவர் இணைந்திருப்பதால் சமய ரீதியான விவகாரங்களை அவர் முன் எடுக்க மாட்டார் என்ற நம்பிக்கை மலேசியர்கள் மத்தியில் இருந்தது.
இந்நிலையில் தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவர்களின் மலாய் பாடபுத்தகத்தில் அரபு சித்திர மொழி 6 பக்கங்கள் இடம்பெறும் என அவர் முதலில் அறிவித்திருந்தார். அதனை வன்மையாக மலேசியர்கள் எதிர்த்த நிலையில் அந்த எண்ணிக்கை மூன்று பக்கங்களாக குறைக்கப்படும் என அவர் கூறியிருக்கின்றார் என மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் டத்தோ மோகன் ஷாண் கூறினார்.
பக்கங்களை குறைப்பது எங்கள் நோக்கமல்ல. தமிழ்ப்பள்ளிகளில் மலாய் மொழி பாட நூலில் அரபு சித்திர மொழியை திணிப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். அரபு சித்திர மொழியை போதிப்பதை அரசு நிறுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
அதை போதிப்பதா? இல்லையா? என்பதை ஆசிரியர்களையும் முடிவு செய்து கொள்வார்கள் என்று கல்வி அமைச்சு இரண்டாவது முறையாக வெளியிட்ட அறிக்கையையும் மலேசிய இந்து சங்கம் நிராகரிக்கின்றது. இஸ்லாம் அல்லாத மாணவர்களுக்கு அரபு சித்திர மொழி தேவையில்லை. இதனை பாடபுத்தகத்தில் திணிப்பதன் மூலம் எதிர்காலத்தில் பல்வேறான பிரச்சனைகள் எழுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மதமாற்ற விவகாரம் உட்பட சமய ரீதியில் பல்வேறான சவால்களை இந்த சித்திர அரபு மொழி கொண்டு வரும் என்பதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
மலேசிய இந்து சங்க தலைமையகத்தில் நடந்த அரபு சித்திர மொழி விவகாரம் குறித்த விளக்கக் கூட்டத்தில் 20 அரசு சாரா இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருமே தமிழ்ப்பள்ளிகள் மட்டுமின்றி தேசிய பள்ளிகளிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட கூடாது என வலியுறுத்தினார்கள்.
இந்த விவகாரத்தை எந்த பிரச்சனையுமில்லாமல் தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும். அதை தவிர்த்து தமிழ்ப்பள்ளிகளில் அரபு சித்திர மொழியை அறிமுகப்படுத்துவோம் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருந்தால் மலேசிய இந்து சங்கம் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க தவறாது என மோகன் ஷாண் கூறினார்.