05 டிசம்பர் 2020-
கோவிட் 19 நச்சில் பெருந்தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட ஆலயங்களுக்கு உதவி தொகை வழங்க அரசாங்கம் ஒப்புதல் தந்திருந்த நிலையில், நேற்று அதற்கான ஒப்பந்தத்தில் மித்ராவும் மலேசிய இந்து சங்கமும் கையெழுத்திட்டன.
கடந்த மார்ச் முதல் கோவிட் 19 தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் விடுத்த நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவினால், நாட்டில் பெரும்பான்மையான ஆலயங்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கின. இந்நிலையில், பாதிக்கப்பட்ட ஆலயங்களுக்கு உதவும் வகையில் அரசாங்கத்திடம் மலேசிய இந்து சங்கம் உதவி தொகை கோரியது.
இந்நிலையில், அதற்கான ஒப்பந்தம் நேற்று வெள்ளிக்கிழமை, ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஹலீமா சாடிக் மற்றும் மனித வள அமைச்சரும் ம.இ.காவின் தேசிய துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ எம்.சரவணன் ஆகியோரின் முன்னிலையில் மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் ஶ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் மற்றும் மித்ராவின் தலைமை இயக்குனர் திரு.மகாலிங்கம் மணியம் ஆகியோர் இடையில் கையெழுத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், மொத்தம் ரிம. 42 லட்சம் உதவி தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் வழி 1934 ஆலயங்கள் பயனடையும். மூன்று வகை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த ஆலயங்களுக்கு உதவி தொகை பகிர்ந்து அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, சங்க பதிவிலாகா (ஆர்.ஓ.எஸ்) பதிவு பத்திரம் மற்றும் வங்கி கணக்கு பத்திரம் ஆகியவற்றை முழுமையாக அனுப்பியிருக்கும் 310 ஆலயங்களுக்கு ஒற்றுமைத்துறை அமைச்சு மூலமாகவே நேரடியாக இந்த உதவி தொகை வங்கியில் செலுத்தப்படும். அதேவேளையில், மற்ற 1624 ஆலயங்களுக்கு மலேசிய இந்து சங்கத்தின் மூலமாக உதவி தொகை பகிர்ந்து அளிக்கப்படும்.
எனவே, இந்து சங்கத்தில் பதிவு செய்து கொண்ட அல்லது பதிவு செய்யாத ஆலயங்கள், மேற்குறிப்பிட்ட பத்திரங்களை இன்னும் வழங்கவில்லை எனில், விரைந்து தங்களின் சங்க பதிவிலாகா (ஆர்.ஓ.எஸ்) பதிவு பத்திரம் மற்றும் வங்கி கணக்கு பத்திரம் ஆகியவற்றை மலேசிய இந்து சங்க வட்டாரப் பேரவை அல்லது மாநிலப் பேரவை மூலமாகவோ நேரிடையாக தலைமையகத்திற்கோ வந்து அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறோம்.
ஆலயங்களுக்கான உதவி தொகை இன்னும் 3 வார காலத்தில் மலேசிய இந்து சங்கத்திடம் கிடைத்தப்பிறகு, பின்னர் ஏறக்குறைய ஒன்று அல்லது இரண்டு மாதக் காலத்திற்குள் அனைத்து ஆலயங்களுக்கும் உதவி தொகை பகிர்ந்து வழங்கப்படும்.
ஆலயங்களுக்கு உதவும் நோக்கில், ஏறக்குறைய 7 மாதங்களாக தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில், உதவி தொகை வழங்கப்பட்டிருப்பது மலேசிய இந்து சங்கத்திற்கு கிடைத்த அங்கீகாரமாகும். எனவே, பலர் குறை கூறிக் கொண்டிருந்தாலும் இந்து சங்கத்தைத் தவறாக சித்தரிக்க முயற்சி செய்து கொண்டிருந்தாலும் இந்துக்களும் ஆலயங்களும் அதனைப் பொருட்படுத்தாது இந்து சங்கத்தின் மீது முழு நம்பிக்கையை வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
நாட்டில் உள்ள ஆலயங்களுக்கு அரசாங்கம் மூலம் மேலும் அதிகமாக நிதி மற்றும் மற்ற உதவிகளைப் பெற்று தர மலேசிய இந்து சங்கம் தொடர்ந்து முயற்சி செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். உதவி தொகை தொடர்பாக மேல் விவரங்கள் பெற மலேசிய இந்து சங்கத்தை 03-7784 4668 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
என்றும் இறைச் சேவையில்,
ஶ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் PMW.,JMW.,AMK.,BKM.,PJK
தேசியத் தலைவர்,
மலேசிய இந்து சங்கம்