
06.06.2021-
கடந்தாண்டு மார்ச் மாதம் கோவிட்-19 நச்சில் பெருந்தொற்றினால் அமல்படுத்தப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவினால் பொதுமக்கள் ஆலயங்களுக்கு செல்ல இயலாத சூழ்நிலை உருவானது. இதனால், பக்தர்களின் நன்கொடை மற்றும் அர்ச்சனை ஆகியவை ஏதும் இல்லாமல் ஆலயங்கள் வருமானம் இன்றி பெரும் சிரமத்திற்கு ஆளாகின. அடிப்படை வசதிகளுக்கான செலவினங்களுக்கு ஆலயங்கள் சிரமப்படுவதைக் கருத்தில் கொண்ட மலேசிய இந்து சங்கம், ஆலயங்களுக்கு அரசாங்கம் வழி மானியம் பெற்று முயற்சி எடுத்தது.
அதன் வகையில், பிரதமருக்கு மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் டத்தோ ஆர்.எஸ்.மோகன் ஷான் கடிதம் ஒன்றை அனுப்பி ஆலயங்களுக்கு மானியம் கோரியபோது, பிரதமரிடமிருந்து பதில் கடிதம் வந்தது. அதில் ஆலயங்களுக்கு மானியம் கோர மித்ராவைத் தொடர்பு கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில், மித்ராவிடம் ஏறக்குறைய 2352 ஆலயங்களுக்கு மானியமாக ரிம.14 மில்லியன் கேட்டுக் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், 2352 ஆலயங்களுக்கு ரிம.5.2 மில்லியன் மட்டுமே வழங்க மித்ரா தொடக்கத்தில் ஒப்புக் கொண்டது.
ஆனால், இந்த உதவி தொகையானது, சமயத்திற்கும் சமுதாயத்திற்கும் முக்கியமானது என்று தெரிந்தும் கூட ஒரு சில தலைவர்கள் இந்த உதவி தொகையானது மலேசிய இந்து சங்கத்தின் மூலமாக வழங்கப்பட கூடாது என்ற அடிப்படையில் தொடர்ந்தாற்போல் புகார்களை வீசிக் கொண்டிருந்தனர்.
பின்னர், பல கலந்துரையாடலுக்குப் பின்னர், இறுதியாக ரிம.4.2 மில்லியன் மானியம் வழங்க மித்ரா ஒப்புக் கொண்டது. ஆனால், சங்கப் பதிவிலாகாவில் (ஆர்.ஓ.எஸ்) பதிவு செய்யப்பட்ட ஆலயங்களுக்கு மட்டுமே வழங்க முடியும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், மொத்தம் 1934 ஆலயங்களுக்கு ரிம.4.2 மில்லியன் வழங்குவதாக முடிவெடுக்கப்பட்டது. இதில் 310 ஆலயங்களுக்கு மித்ராவே நேரடியாக மானியம் வழங்கும் எனவும் அதற்காக ஏறக்குறைய ரிம.7 லட்சத்தை மித்ரா எடுத்துக் கொண்டு மீத தொகையான ரிம.3.58 மில்லியனை மலேசிய இந்து சங்கத்தின் மூலமாக ஆலயங்களுக்கு கொடுக்க வழங்கியது. இதில் மித்ரா நேரடியாக உதவி தொகை வழங்கிய 310 ஆலயங்களில் ஏறக்குறைய 60 ஆலயங்களுக்கு பணம் இன்னும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதற்கு காரணம் ஆலயங்களின் ஆவணங்கள் போதுமானதாகவும் தெளிவின்றியும் இருப்பதாக மித்ரா தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து, நாளிதழ் வழியாக உதவி தொகை குறித்து அறிவிப்பு செய்யப்பட்டு, மலேசிய இந்து சங்கம் நாடு தழுவிய அளவில் மாநில ரீதியாக சென்று அங்குள்ள ஆர்.ஓ.எஸ் பதிவு பெற்ற ஆலயங்களுக்கு உதவி தொகையை வழங்கியது. இதுவரை 1158 பதிவு பெற்ற ஆலயங்களுக்கு ஏறக்குறைய ரிம.2.5 மில்லியன் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், மித்ராவின் ஒப்பந்தத்தின் அடிப்படையில், மீதமுள்ள ஏறக்குறைய ரிம.1.1 மில்லியன் உதவி தொகை மீண்டும் மித்ராவிடம் ஒப்படைக்கப்படும். அதோடு, உதவி தொகை குறித்த முழு அறிக்கையும் மித்ராவிடம் மலேசிய இந்து சங்கம் வழங்கும்.
மீதமுள்ள உதவி தொகை ஆலயங்களுக்கு வழங்கப்படாததற்கு சில ஆலயங்கள் உதவி தொகை கோராததும் நிறைய ஆலயங்கள் ஆர்.ஓ.எஸ்-சில் பதிவு செய்யவில்லை என்பதும் காரணமாகும். பதிவு செய்யாத ஆலயங்கள் பெரும்பாலும் தோட்டப்புறத்தில் உள்ள ஆலயங்களாகும். மேலும், நாட்டில் நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவுகளில் அடிக்கடி மாற்றம் பிறப்பிக்கப்பட்டதால் இந்து சங்கம் நேரடியாக ஆலயங்களைத் தொடர்பு கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அண்மைய காலமாக, ஒரு சில தரப்பினர் இந்த ஆலய உதவி தொகை தொடர்பாக மக்களைக் குழப்பும் வகையில் தவறான தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர். அதில் குறிப்பாக, ஒப்பந்தத்தின் இறுதிநாள் மார்ச் 31 என்று கூறியுள்ளனர். ஆனால், ஒப்பந்தத்தின் இறுதிநாள் மே 31ஆம் தேதி ஆகும். எனவே, ஒரு சில தரப்பினர் தங்களின் சுய லாபத்திற்காக மக்களைக் குழப்புவதை நிறுத்தி கொள்ளுமாறு மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது. நிதி சுமையை எதிர்நோக்கிய காலத்தில் இந்த உதவி தொகையானது தங்களுக்கு பெரும் பயனாக இருந்தது என்றும் இதற்காக முயற்சி எடுத்த மலேசிய இந்து சங்கத்திற்கு நன்றியும் பாராட்டையும் ஆலயங்கள் தெரிவித்துக் கொண்டன. இந்து சமய வளர்ச்சிக்கும் சமுதாய மேம்பாட்டிற்கும் தேவையானவற்றை முன்னிருத்த மலேசிய இந்து சங்கம் எப்போதும் துடிப்புடன் செயலாற்றும்.