ஆலயங்களை மீண்டும் திறப்பதற்கான அறிவிப்பு ஒத்திவைப்பு

19 மே 2020 –

கோவிட்-19 எனும் நச்சில் பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மரணமடைவோரின் எண்ணிக்கையைக் குறைக்கவும் நோய் பரவலைத் தடுக்கவும் மலேசிய அரசாங்கம் கடந்த 04.05.2020ஆம் தேதி முதல் நிபந்தனையுடனான நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பித்துள்ளதோடு தேசிய பாதுகாப்பு மன்றம் தேவையான அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் அமல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், இன்று காலையில் மலேசிய சுகாதார அமைச்சும் ஒற்றுமைத்துறை அமைச்சும் உடன் கலந்து கொண்ட தேசிய பாதுகாப்பு மன்றத்தின் நடவடிக்கை குழுவின் சந்திப்பு கூட்டத்தில், வழிப்பாட்டு தளங்களை மீண்டும் திறப்பது குறித்த அறிவிப்பு இன்று அறிவிக்கப்படாது என்றும் வியாழக்கிழமை (21.05.2020) வரை ஒத்தி வைக்கப்படுகிறது என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளதை மலேசிய இந்து சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த சந்திப்புக் கூட்டத்தில், பக்தர்களுக்கு வழிப்பாட்டுத் தளங்களைத் தினமும் திறக்க முடியாது என்றும் குறிப்பிட்ட நேர அவகாசம் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்து கொள்ளும் வகையில் வாரத்திற்கு முக்கியமான ஒன்று அல்லது இரு நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் தேசிய பாதுகாப்பு மன்றம் முடிவெடுத்துள்ளது. ஆகவே, ஒற்றுமைத்துறை அமைச்சின் பரிந்துரைக்கப்பட்ட செயல்பாட்டு தர விதிமுறை (SOP) மறு ஆய்வு செய்யப்பட்டு வரும் வியாழன் அன்று முடிவெடுக்கப்படும்.

மேலேயுள்ள முடிவானது நாட்டிலுள்ள அனைத்து இந்து ஆலயங்களுக்கும் பொருந்தும். எனவே, நாட்டில் நிலவி வரும் கோவிட்-19 சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தேசிய பாதுகாப்பு மன்றம் அறிவிக்கும் வரை, ஆலயங்களை திறக்க  வேண்டாம் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது. இக்கட்டான இக்காலக்கட்டத்தில் ஆலயங்களுக்குச் சிறந்தவற்றை செய்ய மலேசிய இந்து சங்கம் உறுதிக் கொண்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

என்றும் இறைச் சேவையில்,

ஶ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் PMW.,JMW.,AMK.,BKM.,PJK

தேசியத் தலைவர்,மலேசிய இந்து சங்கம்

You may also like...