ஆலயத் திருவிழாவில் சிறுமிக்கு மதுபானம் வழங்குவதா? இனி இம்மாதிரியான இழிச்செயல்கள் நடந்தால் போலீஸ் பெர்மிட்டை இரத்து செய்யுமாறு மலேசிய இந்து சங்கம் போலீசிடம் பரிந்துரை வழங்கும்!
16 ஆகஸ்டு 2023-
ஆலயத் திருவிழாவின்போது அருள் வந்து ஆடுவதாக நம்பப்படும் நபர் ஒருவர் சிறுமி ஒருவருக்கு மதுபானம் வழங்கும் காணொளி கண்டு மலேசிய இந்து சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.
புனித தளமான ஆலயத்தில் அண்மைய காலமாக ஒரு சிலரின் அடாவடித்தனமான செயல்கள் பொதுமக்களை முகம் சுழிக்க வைக்கும் அளவுக்கு எல்லை மீறி போய் கொண்டிருக்கின்றன. இதில் அதிகப்பட்சமாக ஜொகூரில் உள்ள முனீஸ்வர ஆலயம் என கருதப்படும் ஆலயத்தில் திருவிழாவின் போது அருள் வந்து ஆடும் நபர் சிறுமி ஒருவருக்கு அருந்துவதற்கு மதுபானம் வழங்கும் காணொளி வைரலாகி வருவது கண்டு இந்து சங்கம் வேதனையும் கடும் எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கிறது.
ஆலயத்தில் மதுபான புழக்கம் தவறு என்பதை இந்து சங்கம் தொடர்ந்து கூறி வருகிறது. அதை விட கொடுமையானது சாமியாட்டம் என்ற பெயரில் சிறுவர்களுக்கு மதுபானம் வழங்குவது. மலேசிய சட்டத்திட்டத்தின் படி இது பெரும் குற்றமாகும். இதனை சம்பந்தப்பட்ட நபரும் ஆலய நிர்வாகத்தினரும் அறியவில்லையா? அல்லது யார் என்ன சொல்வது என்ற அலட்சியமா?
இதுமாதிரியான சமயத்திற்கு இழுக்கு சேர்க்கும் காரியங்களில் சம்பந்தப்படும் ஆலயங்களின் திருவிழாவிற்கான போலீஸ் அனுமதிகளை (பெர்மிட்) இரத்து செய்ய வேண்டும் என இந்து சங்கம் போலீஸ் துறையிடம் பரிந்துரை வழங்கும். அதோடு, வருங்காலங்களில் இந்து சங்கம் அவ்வாலயங்களுக்கு ஆதரவு கடிதம் போன்ற உதவிகளை வழங்காது. இதன்வழி, ஆலய நிர்வாகம் ஆலய வளாகத்தில் நடப்பவை மீது அதிக கவனம் செலுத்தவும் இழிச்செயல்கள் நடக்காமல் இருப்பதை உறுதிச் செய்யவும் முடியும்.