ஆலய நிர்வாகம் மற்றும் பக்தர்கள் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும்
08.06.2022-
ஆலய வளாகத்தில் நடக்கும் நடவடிக்கைகள் மீது ஆலய நிர்வாகம் மற்றும் பக்தர்கள் அதிக கவனத்துடனும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.
அண்மையக் காலமாக இணையத்தில் பரவலாகி வரும் பல காணொளிகள் ஆலயங்களில் அநாவசிய சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் காட்டுகின்றன. அண்மையில், பெர்லீஸ் பாவ்வில் உள்ள மாரியம்மன் ஆலயத்திற்கு இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வரும் சர்ச்சைக்குரிய மதபோதகர் ஷம்ரி வினோத் வந்திருந்தது இந்துக்களுக்கிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஷம்ரி வினோத்தின் வருகை முன்கூட்டியே தெரியாது என்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது என ஆலய நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது. இருப்பினும், இனி வரும் காலங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நபர்களின் முழு விவரங்களை ஆலயங்கள் கண்டறிந்த பின்னரே அனுமதி வழங்க வேண்டும். அதையும் மீறி, இதுப்போன்ற சம்பவங்கள் நடந்து விட்டால், துவேஷ கருத்துகளைப் பரப்புவோரை ஆலயத்தின் உள்ளே அனுமதிக்காமல் இருப்பதை நிர்வாகம் உறுதிச் செய்ய வேண்டும் என இந்து சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.
மேலும், அண்மைய காலமாக ஆலய வளாகத்தில் டிக் டோக் காணொளி செய்து போடும் பழக்கம் அதிகரித்து வருவது கண்டு இந்து சங்கம் வருத்தம் அடைகிறது. ஆலயம் என்பது ஆன்மீக தளம், வழிப்பாட்டுக்கு உரிய இடம். அதன் மாண்பை குறைக்கும் வகையில் சினிமா பாடல்களுக்கு அநாகரீகமாக நடனம் ஆடி டிக் டோக் காணொளி செய்து பதிவிடுவது நம் சமயத்தை நாமே கேலிக்கூத்தாக ஆக்கும் செயல் என்பது உணர்தல் வேண்டும்.
ஆலயம் கேளிக்கை மையமல்ல அல்லது என்ன வேண்டுமாலும் செய்யலாம் என்ற போக்குக்கு ஏற்ற இடம் அல்ல. தெய்வத்திற்கு மரியாதை தர வேண்டிய இடமது. யாரேனும் டிக் டோக் காணொளியோ அல்லது அநாகரீகமாக நடனமாடி கொண்டிருந்தாலோ ஆலய நிர்வாகம் மட்டுமல்ல அதனைப் பார்க்கும் பொதுமக்களும் உடனடியாக அச்செயலைத் தடுத்து நிறுத்த வேண்டும். அல்லது நிர்வாகத்திடம் இதுக்குறித்து புகார் அளிக்க வேண்டும். அதனை விடுத்து அங்கேயே அச்செயலைக் கண்டிக்காமல் இணையத்தில் பகிர்ந்து ஆவேசப்படுவதில் பயனில்லை. இவ்வாறான செயல்களைத் தவிர்க்க, அவசியமெனில் ஆலயத்தில் கைப்பேசி பயன்பாட்டுக்கு தடை விதிக்கவும் ஆலய நிர்வாகம் ஆலோசிக்கலாம்.
புனித தலத்தை களங்கப்படுத்துவதைப் பார்த்துக் கொண்டு இந்து சங்கம் அமைதியாக இருக்காது. இனி வரும் காலங்களில், அநாகரீக செயலால் புனிதத்தைக் கெடுக்கும் நபர்கள் மீது இந்து சங்கம் போலீஸ் புகார் செய்து நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிச் செய்யும் என தெரிவித்துக் கொள்கிறது.
ஆலயத்தின் புனிதத்தை நாம் காக்கவில்லை எனில் யார் காப்பாற்றுவார்..!