இந்தியர்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்க வேண்டாம்

06 ஜனவரி 2022-

புதிதாக செய்கிறோம் என்ற பெயரில் இருப்பதையும் குழப்பி, இந்துக்களின், இந்தியர்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்க வேண்டாம் என சில தரப்பிடம் மலேசிய இந்து சங்கம் வேண்டுக்கோள் விடுக்கிறது.

மலேசிய இந்து சங்கம், இதுவரை நாட்டில் உள்ள இந்தியர்களின் குறிப்பாக இந்துக்களின் தேவைகளை முறையாக அறிந்து மக்களுக்கு செவ்வனே சேவையாற்றி வருகிறது. நாட்டில் வாழும் இந்துக்களுக்கு தாய் இயக்கமாக விளங்கி வரும் மலேசிய இந்து சங்கம் சமய அமைப்பாக இருந்தாலும் இந்தியர்கள் எனும்போது பாகுபாடு இன்றி முன்னின்று தனது சேவைகளையும் பாதுகாப்பு அரணாக தனது குரலையும் முன்னிருத்தியுள்ளது யாவரும் அறிந்ததே.

சமய ரீதியில் மட்டுமல்லாது மொழி, கலாச்சாரம் என எந்த பாகுபாடும் இல்லாமல் மக்களின் சேவையே மகேசன் சேவை என தொண்டாற்றும் மலேசிய இந்து சங்கம், அரசாங்கத்துடன் இணக்கமான உறவை வளர்த்துக் கொண்டு இந்தியர்களின் பிரதிநிதியாக அனைத்து அரசு இலாகாவிலும் நமது உரிமை வேண்டி பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து மேற்கொண்டும் தீர்வு கண்டும் வருவதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

ஆனால், ஒரு சில தரப்பினர் தங்களின் சுய லாபத்திற்காக இந்தியர்களின் குறிப்பாக இந்துக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் எண்ணத்தில் கீழறப்பு வேலைகள் செய்து வருவது வருத்தம் அளிக்கிறது. மக்கள் தொகையில் நம் எண்ணிக்கை மிக குறைவு தான் ஆனால், நம்மைப் பிரதிநிதிப்பதாக கூறி கொள்ளும் இயக்கங்கள் கணக்கில் அடங்கா. அதில் பெரும்பாலானவை, பெயருக்கு பதிவு செய்து விட்டு முடங்கி கிடக்கின்றன.

இதில், இந்தியர்களுக்கு உண்மையிலேயே சேவையாற்றும் இயக்கங்கள் யாவும் மலேசிய இந்து சங்கத்தில் உறுப்பியம் பெற்று நம் பிரதிநிதிகளாக அரசாங்கத்திடம் விளங்கி வருகின்றன.

இந்நிலையில், நன்றாக இருப்பதை குழப்பி, மற்றவர்களையும் குழப்பி ஒருங்கிணைப்பு என்ற பெயரில் மற்றொரு இயக்கம் தற்போது நாட்டில் உருவாகுவது அவசியமா எனற கேள்வியை மலேசிய இந்து சங்கம் முன்னிருத்துகிறது.

ஏற்கனவே, மலேசிய இந்து சங்கம் நாட்டில் உள்ள ஆலயங்களையும் இயக்கங்களையும் ஒருங்கிணைத்து அரவணைத்து வழிநடத்தி வரும் நிலையில், புதிய அமைப்பு ஒன்று மக்களை மட்டுமல்ல அரசாங்க இலாகாக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி குழறுப்படிகளை உண்டாக்குவது அவசியம் தானா? முன்பு தொடங்கப்பட்டு பின்னர் இயங்க முடியாமல் முடங்கி போன இயக்கத்தை மீண்டும் பயன்படுத்திக் கொண்டு சுய லாபம் தேடுவது எதற்கு?

1965ஆம் ஆண்டு முதல் இந்து சங்கம், ஆலய நிர்வாக விவகாரம் தொடங்கி, ஆலய நிலம், ஆலய உடைப்பு, ஆலய தேவைகள், பூஜை புனஸ்கார வழிக்காட்டி என அனைத்து விவகாரங்களிலும் முதல் ஆளாக முன்னின்று செயலாற்றி வருவதை யாரும் மறுக்க முடியாது. இன்று பிரச்சனையில் உள்ள ஆலயங்களைக் கூர்ந்து கவனித்தால், பல ஆண்டுக்களுக்கு முன்னமே விவகாரங்களுக்கான தெளிவான தீர்வு குறித்து இந்து சங்கம் எடுத்துரைத்தும் அதனை ஏற்க மறுத்த உண்மை புலப்படும். இருப்பினும், எக்காலத்திலும் இந்து சங்கம் ஆலயங்களைக் கைவிட்டது கிடையாது. அதேநேரத்தில் நம் பணிகளைச் செவ்வனே செய்ய நமக்கு இடையூறாக இருந்தவை யாவும் அரசியல் ரீதியான தடைகளே தவிர அரசாங்கத்தால் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மை நிலவரம் என்ன என்பதை ஆலயங்களும் இயக்கங்களும் உணர்ந்து கொள்ள வேண்டிய காலம் இது. சில தரப்பினர், புதிதாக ஏதோ செய்வதாக கூறி கொள்வதை, இந்து சங்கம் காலங்காலமாக செய்வது வருகிறது. இனியும் செய்யும். சில தரப்பினர், அரசியல் நோக்கத்திற்காக நம்மை பிரித்தாள நினைக்கும் எண்ணத்தை கைவிட வேண்டும் என இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.

அரசியல் நோக்கம் இன்றி, முழுதும் சமயத்தை மட்டுமே முன்னிருத்தி நாட்டில் உள்ள இந்துக்களுக்கும் இந்தியர்களுக்கும் ஆலயங்களுக்கும் இந்திய இயக்கங்களுக்கும் இந்து சங்கம் எப்போதும் அரணாக விளங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.