இந்து சமய விவகாரத்தில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது – மலேசிய இந்து சங்கம் கோரிக்கை

மலேசிய இந்து அறப்பணி வாரியம் அமைப்பதற்கான ஆலோசனைக் குழுவில் அரசு சார்ப்பற்ற இயக்கங்கள் இடம் பெற்றிருப்பது தவறா? பக்காத்தான் அரசின் நோக்கம் தான் என்ன? இந்து சமய விவகாரத்தில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது – மலேசிய இந்து சங்கம் கோரிக்கை

ஏப்ரல் 17-

பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையிலான மலேசிய இந்து அறப்பணி வாரிய ஆலோசனை குழுவில் பல அரசு சாரா இயக்கங்கள் அழைக்கப்பட்டு, அவை வாரியம் அமைக்கப்படுதல் தொடர்பான ஆலோசனைகளை வரைந்து வருகின்றன.

குறிப்பாக, ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ள மலேசிய இந்து சங்கம், தேசிய அளவிலான மலேசிய இந்து அறப்பணி வாரியம் அமைக்கப்பட்டால், நாட்டில் உள்ள ஆலயங்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் மிக கவனமுடன் ஆராய்ந்து அதற்கான ஆலோசனைகளை அரசிடம் வழங்கும் பங்கினை ஆற்றி வருகிறோம்.

ஆனால், ஒரு சிலர் மலேசிய இந்து சங்கத்தின் மீது தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். நாளிதழ் செய்தி வழி, ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ள இயக்கங்களைத் தவறாக சித்தரித்து மலேசிய இந்துகளிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது ஏன்? இதனால் யாருக்கு பயன்?

மேலும், அதே செய்தியில், ‘கோவில்கள் திருடர்களின் கூடாரம்’ என்று குறிப்பிட்டுள்ளது ஏற்றுக் கொள்ள முடியாத விசயமாகும். சில ஆலயங்களில் தவறுகள் நடந்திருக்கலாம். அதற்காக சமயத்திற்கு அரும்பணி ஆற்றி வரும் ஆலயங்கள் அனைத்தையும் தவறாக சித்தரிப்பது முறைகேடானது. நாட்டில் உள்ள ஆலயங்கள் இந்து சமயத்தை வளர்க்க பெரும் முயற்சி எடுத்து வருகின்றன. அவ்வாலயங்களை இழிவுப்படுத்தும் வகையில் இவ்வாறு செய்தி வெளியிடுவது ஏற்புடையது அல்ல.

நாட்டில் உள்ள பல ஆலயங்கள் சிறந்த முறையில் சமூக சேவையாற்றி வரும் நிலையில், அவற்றில் அரசியல்வாதிகள் தலையிட்டு, ஆலயங்களை அரசு கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு, நிர்வாகத்தில் தனக்கு வேண்டியவர்களை அமர வைக்கும் முயற்சிக்கான மறைமுக தாக்குதலா? அவ்வாறு ஏதும் நடந்துவிடக் கூடாது, சிலர் ஆலயங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளக் கூடாது என்பதில் மலேசிய இந்து சங்கம் விழிப்புடன் இருக்கிறது.

கடந்த 54 ஆண்டுகளாக ஆலய விவகாரங்களுக்கு தாய் சங்கமாக இருந்து சிறப்பானதொரு சேவையை வழங்கி வருகிறது மலேசிய இந்து சங்கம். நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆலய நிர்வாகங்களும் சிறப்பாக தனித்து இயங்கி வருவதோடு அவை தனித்துவமாக செயலாற்றி வருகின்றன. இவ்வாறு சுதந்திரமாக செயல்படும் சமயத்தைக் கட்டுக்குள் வைக்க சிலர் முயல்கின்றனர்.

அதேவேளையில், மலேசிய இந்து அறப்பணி வாரியம் அமைக்கப்பட்டால் அதில் அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். தற்போதுள்ள ஆலோசனைக் குழு, முறையாக தனது பங்கினை ஆற்றி வருகிறது. இதற்கு யாரும் முட்டுக் கட்டை போட வேண்டாம்.

நாட்டில் இந்து சமயமும் ஆலயங்களும் நிலைத்து நிற்க மலேசிய இந்து சங்கம் போராட தயாராக இருக்கிறது என அதன் தேசியத் தலைவர் ஶ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ்.மோகன் ஷான் தெரிவித்தார்.

என்றும் இறைச் சேவையில்,

ஶ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான்

தேசியத் தலைவர்,

மலேசிய இந்து சங்கம்

You may also like...