01 டிசம்பர் 2022-
இன ஒற்றுமைக்கும் சமய இணக்கத்திற்கும் உலக அரங்கில் இன்றளவும் பாராட்டப்படும் மலேசியாவில் அண்மைக் காலமாக முன்னெடுக்கப்படும் இன-சமய பேதங்கள் போதும் என்றும் ருக்குன் நெகாரா கோட்பாடு வீரியத்துடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் மலேசிய ஆட்சியாளர் மன்றம் வெளிப்படுத்தியுள்ள கருத்தை மலேசிய இந்து சங்கத்தின் சார்பில் வரவேற்பதாக அதன் தேசியத் தலைவர் ‘சிவநெறி செல்வர்’ ஶ்ரீ காசி சங்கபூசன் தங்க. கணேசன் தெரிவித்தார்.
மலேசிய ஆட்சியாளர் மன்றத்தின் 260ஆவது கூட்டத்தின் 2-ஆவது நாள் அமர்வைத் தொடக்கி வைத்து உரையாற்றியபோது அதன் மாண்புறு தலைவரும் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ‘யாங் டி பெர்துவா பெசாரு’மாகிய துவாங்கு முஹ்ரிஸ் இப்னி அல்-மர்ஹும் துவாங்கு முனாவிர், புதிய அரசு நாட்டு மக்கள் அனைவரையும் இனம்-சமயம் கடந்து ஒன்றிணைக்க செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
நாட்டில் பேசப்படும் இன-சமய பேதம் போதும் என்று சொன்ன அவர், ருக்குன் நெகாரா கோட்பாட்டை மக்கள், மக்களின் பிரதிநிதிகள், தலைவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் அனைத்துக் கட்டங்களிலும் உயர்த்திப் பிடிக்க வேண்டும்; மாறாக அது வெறும் ஆவணமாக இருப்பதில் எந்தப் பயனும் இல்லை என அவர் மேலும் வலியுறுத்தினார்.
1970-ஆம் ஆண்டில் நாட்டின் 4-ஆவது மாமன்னரால் பிரகடம் செய்யப்பட்ட ருக்குன் நெகாரா-வின் மாண்பும் உன்னதமும் போற்றப்பட வேண்டும். அதன்வழி, நாட்டு மக்கள் அனைவரிடம் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் எழுச்சி பெறும்; அதற்கு ஏற்ப அதை புதிய ஆட்சியில் தலைவர்கள் அனைவரும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முன்னெடுக்க வேண்டும்; மாறாக, இளைஞர்கள் எழுப்பும் வெற்றுக் கூச்சலால் ஒன்றும் ஆகாது என்றும் மாண்புறு மலாய் ஆட்சியாளர் மன்றத் தலைவர் குறிப்பிட்டார்.
இந்த உயர்வானக் கருத்து, பொருத்தமான நேரத்தில் நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. இதை, மலேசிய இந்து சங்க தேசியப் பேரவையின் சார்பில் வரவேற்பதாகவும் மலேசிய இந்து சங்க நிகழ்ச்சிகளில் ருக்குன் நெகாரா கோட்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தங்க. கணேசன் தெரிவித்தார்.
என்றும் இறைச்சேவையில்,
ஶ்ரீ காசி சங்கபூசன் தங்க. கணேசன் AMN.,ASA
தேசியத் தலைவர்
மலேசிய இந்து சங்கம்