22 டிசம்பர் 2022:
பருவ கால மழையால் நாட்டு மக்கள் தொடர்ந்து இயற்கைப் பேரிடரை எதிர்கொண்டு வருகின்றனர். இதிலிருந்து நாடும் மக்களும் மீட்சிபெற வரும் சனிக்கிழமை டிசம்பர் 24-ஆம் நாள் இரவில் ஒருசேர பிரார்த்தனை பூசை நடத்தும்படி அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் கேட்டுக் கொள்வதாக மலேசிய இந்து சங்க தேசியத் தலைவர் ஶ்ரீகாசி சங்கபூசன் தங்க கணேசன் கேட்டுக் கொள்கிறார்.
உயிர் உடல் சேதம், பொருள் சேதம், வசிப்பிடம் பாதிப்பு என நாட்டு மக்கள் அடுத்தடுத்து இன்னலை சந்தித்து வருவதால், டிசம்பர் 31-ஆம் நாள் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ரத்துசெய்யப்படுவதாக ஒற்றுமை அரசாங்கத்தின் பிரதமர் அறிவித்துள்ளார்.
பத்தாங் காலி நிலச்சரிவில் அதிகமான உயிரிழப்பு, கிழக்குக் கரை மாநிலங்களான கிளந்தான், திரங்கானுவில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளம், பேராக்-பகாங் மாநிலங்களிலும் வெள்ளப்பாதிப்பு என மக்கள் தொடர்ந்து பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
இவற்றிலிருந்து நாடும் மக்களும் மீட்சிபெற அருள்பாலித்து பாதுகாப்பு அளிக்கும்படி எல்லாம் வல்ல பரம்பொருளிடம் தஞ்சம் அடையும்பொருட்டு 24 டிசம்பர் 2022, சனிக்கிழமை நித்திய பூசைக்குப் பின், பரிகார பூசையை மேற்கொள்ளும்படி நாட்டில் உள்ள அனைத்து இந்து வழிபாட்டு தலங்களையும் மலேசிய இந்து சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்வதாக தங்க கணேசன் தெரிவித்துள்ளார்.