இருவகை பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சிக்கான தேதிகள் – எதை பின்பற்றுவது

16 ஜனவரி 2023-

இவ்வருடம் நடக்கவிருக்கும் சனிப்பெயர்ச்சியில் சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம்பெயர்கிறார். ஆனால், சனிப்பெயர்ச்சி தேதி குறித்து குழப்பம் நிலவுவதால் மலேசிய இந்து சங்கம் அதற்கான விளக்கம் அளிக்கிறது.

திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி இவ்வருட சனிப்பெயர்ச்சி எதிர்வரும் 17.01.2023ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி எதிர்வரும் 20.12.2023ஆம் தேதி நடைபெறுகிறது.

இதில் எதனைப் பின்பற்றுவது சிறப்பு என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதற்கு மலேசிய இந்து சங்கத்தின் மத்தியச் செயலவை உறுப்பினரும், நெகிரி செம்பிலான மாநிலப் பேரவையின் தலைவரும் நெகிரி செம்பிலான், மலாக்கா மாநில அர்ச்சக சங்கத்தின் தலைவருமான சிவஶ்ரீ டாக்டர் ஏ.எல். ஆனந்த கோபி சிவாச்சாரியார் விளக்கம் அளிக்கிறார்.

சில ஆலயங்களில் திருக்கணிதப் பஞ்சாங்கம் பயன்படுத்தப்பட்டாலும் இந்தியாவில் பெரும்பாலான ஆலயங்கள் வாக்கியப் பஞ்சாங்கத்தைத் தான் பயன்படுத்துகின்றன. அதோடு, பண்டைய காலம் தொட்டு வாக்கியப் பஞ்சாங்கத்தைப் பயன்படுத்தி தான் பண்டிகைகளும் சிறப்பு நாட்களும் கணிக்கப்பட்டன. வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பகவான் எதிர்வரும் 27.06.2023ஆம் தேதி வக்கிரமாகிறார். வக்கிரமாகி மகரத்திருந்து கும்பம் சென்றடைகிறார். பின்னர் 20.12.2023ஆம் தேதி மீண்டும் மகரத்திலிருந்து கும்பத்திற்கு இடம் பெயர்கிறார்.

எனவே, வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி பெயர்ச்சி என்பது 20.12.2023ஆம் தேதி நடைபெறுகிறது என்பதால் அதனைப் பின்பற்றுவதே சிறப்பு என சிவஶ்ரீ ஆனந்த கோபி சிவாச்சாரியார் தெரிவித்தார்.

என்றும் இறைச்சேவையில்,

ஶ்ரீகாசி சங்கபூசன் தங்க. கணேசன் AMN.,ASA

தேசியத் தலைவர்