16 டிசம்பர் 2022-
இந்து வழிபாட்டு தலங்களில் உள்நாட்டு நாதஸ்வர, மேள இசைக் கலைஞர்களுக்கு வாய்ப்பளிப்பதில் ஆலய நிருவாகத்தினர் அக்கறைக் காட்ட வேண்டும் என்று மலேசிய இந்து சங்க தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ ஶ்ரீகாசி சங்கபூசன் தங்க கணேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாதஸ்வர, மேள இசைக் கலைஞர்கள் பற்றாக்குறையால் எத்தனையோ ஆலயங்களில் மங்கள நிகழ்ச்சிகளின்போது பின்னடைவை சந்தித்து வருகின்றனர். தவிர, இலங்கை மற்றும் தமிழ் நாட்டிலிருந்து இசைக் கலைஞர்களை வரவழைப்பதிலும் பல்வேறு நடைமுறைச் சிக்கலை நாம் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறோம். எனவே, இதற்கெல்லாம் தீர்வு காணும் வகையில் உள்நாட்டில் இருக்கும் இசைக் கலைஞர்களைப் பயன்படுத்திக் கொள்ள ஆலய நிர்வாகத்தினர் முன்வர வேண்டும்.
உள்நாட்டில் நன்கு பயிற்சி பெற்ற மேளக்காரர்களும், நாதஸ்வர கலைஞர்களும் அதிக அளவில் இருக்கிறனர். இசைத் துறையை மட்டும் நம்பி இருக்கும் இத்தகைய கலைஞர்களுக்கு உரிய வாய்ப்பு அளிக்கப்படாததால், அவர்களின் குடும்பத்தினர் வாழ்வாதார சிக்கலை எதிர்நோக்கி வருகின்றனர் என்று அகில மலேசிய நாதஸ்வர-தவில் கலைஞர் இயக்கத் தலைவர் ஏ.கணேசப் பிள்ளை தெரிவித்துள்ளதையும் மலேசிய இந்து சங்கம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
ஆலயங்களில் அமர்த்தப்படும் இசைக் கலைஞர்கள் அந்தந்த ஆலய மட்டத்தில் தங்களின் சேவையை நிறுத்திக் கொள்ளாமல், திருமணம் உள்ளிட்ட வெளி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கின்றனர். இத்தகைய வெளிநாட்டு இசைக் கலைஞர்கள் தங்களின் லாப நோக்க்கத்தை மட்டும் கருதி குறைவான கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு வெளித் தேவைகளில் கலந்து கொள்கின்றனர்.
இத்தகையப் போக்கு, உள்நாட்டு இசைக் கலைஞர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன் அவர்களின் இசைப் பயணத்திற்கு முட்டுக்கட்டையாகவும் இருக்கிறது.
வெளிநாட்டு இசைக் கலைஞர்களுக்கு, குறிப்பிட்ட ஆலயச் சேவைக்கு மட்டுமே மலேசிய இந்து சங்கம் பரிந்துரைக் கடிதத்தை வழங்குவதால், சம்பந்தப்பட்ட ஆலயத்தைக் கடந்து வெளித் தேவைகளில் கலந்து கொள்வது சட்டத்திற்குப் புறம்பானது என்பதை அனைத்துத் தரப்பினரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தவிர, வெளிநாட்டில் இருந்து வருகின்ற இசைக் கலைஞர்கள் அனைவரும் தேர்ந்தவர்களாக இருப்பதில்லை. சில இடங்களில் போதிய அனுபவமும் ஆற்றலும் இல்லாமல் தாளம் சுதியும் தப்பும் வகையில் வாசிக்கின்றனர். இதையெல்லாம் களையும் வகையில் உள்நாட்டைச் சேர்ந்த தரமான இசைக் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று இந்து சங்கம் பரிந்துரைக்கிறது.
இசைத் துறையில் ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு உள்நாட்டிலேயே சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படுவதால், ஆர்வம் உள்ள இளைஞர்கள் இதன் தொடர்பில் மலேசிய இந்து சங்கத்திற்கு விண்ணப்பிக்கலாம். ஏன் மலேசிய இந்து சங்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றால், உள்நாட்டு இசைக் கலைஞர்களைப் பற்றிய பதிவு இருந்தால்தான், அவர்களுக்குத் தேவையான வாய்ப்புகளை மலேசிய இந்து சங்கத்தால் ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.
இசைக் கலைஞர்கள் தொடர்பான தேவையை நிறைவு செய்யும் வகையில் ஆர்வமுள்ள உள்நாட்டு இளைஞர்களுக்கு முறையான வகையில் நாதஸ்வர மேள இசைப்பயிற்சி அளிக்கவும் பயிற்சி முடித்தபின் அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் மலேசிய இந்து சங்கம் முனைப்பு காட்டி வருகிறது.
எனவே, நாட்டில் உள்ள ஆலயங்களின் நிர்வாகப் பொறுப்பாளர்கள் உள்நாட்டு இசைக் கலைஞர்களில் பொருத்தமானவர்களை அடையாளம் கண்டு அப்படிப்பட்டவர்களுக்கும் தத்தம் வழிபாட்டுத் தலங்களில் வாய்ப்பளிக்க முன்வந்தால், அது சம்பந்தப்பட்டவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைப்பதாக அமையும். மொத்தமாக வெளிநாட்டுக் கலைஞர்களுக்கு மட்டும் வாய்ப்பளிக்காமல் பாதியளவும் உள்நாட்டு இசைக் கலைஞர்களுக்கும் வாய்ப்பளித்தால் அது அனைத்துத் தரப்பினருக்கும் அணுகூலமாக அமையும் என்பது திண்ணம்.