ஒற்றுமையில் அமைதி காண்போம் – டத்தோ ஆர்.எஸ்.மோகன் ஷான்னின் விகாரி இந்து புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
ஏப்ரல் 13-
விளம்பி வருடம் முடிந்து, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 14ஆம் தேதி, மலேசிய நேரப்படி மாலை 3.44 மணிக்கு விகாரி புத்தாண்டு பிறக்கிறது. சித்திரை மாதம் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை தசமி திதியும் ஆயில்யம் நட்சத்திரம் 2ஆம் பாதமும் கடக ராசியும் சூலம் நாம யோகமும் தைதுலம் கரணமும் கூடிய நன்னாளில் மங்களகரமான விகாரி வருடம் பிறக்கிறது.
அன்று வருடம் பிறக்கும் நேரத்திற்கு முன்னும் பின்னும் 10 நாளிகை விஷு புண்ய காலம் என்று பெயர். அதனால் காலை 11.44 மணி முதல் மாலை 7.44 மணி வரை இந்துக்கள் மருந்து நீர் தேய்த்து குளித்து, சிவப்பு நிறம் கலந்த புத்தாடை உடுத்தி, மாணிக்க கல் (அல்லது சிவப்பு கல்) பதித்த ஆபரணம் தரித்து, வாழை இலையில் பச்சரிசியைப் பரப்பி அதில் பூரண கும்பம் வைத்து, அருகில் மங்கள பொருட்கள், பழங்கள், இனிப்புகள், நவதானியங்கள், தங்க, வெள்ளி ஆபரணங்கள், காசுகள், கண்ணாடி வைத்து தீபமேற்றி தரிசித்து வணங்க வேண்டும். மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் செய்ய வேண்டியவர்கள் அன்றைய நாளில் இவற்றை செய்வது மிகவும் சிறப்பு.
சிந்தனை மாற்றமே, சிறந்த சமுதாயம் அமைய வழி அமைக்கும். அதற்கு பிறக்கவிருக்கின்ற புத்தாண்டைக் காரணியாக கொண்டு, இதுநாள் வரை கடந்து வந்த பாதையினைச் சீர்த்தூக்கி பார்த்துத், தீமைகளைத் தவிர்த்து நன்மைகளை அதிகரித்து வாழ்வில் மேன்மைக் கொள்ள எண்ணம் கொள்வோம்.
மேலும், புத்தாண்டு புதிய வேகத்தைக் கொடுப்பதோடு அது மலேசியர்களிடையிலான சகோதரத்துவத்தை வலுப்படுத்தக் கூடிய விவேகத்தையும் கொடுக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். மத, இனங்களிடையிலான வேற்றுமைகளைக் களைந்து, நாட்டின் நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் நடவடிக்கைகளுக்கும் சம்பவங்களுக்கும் மனதளவிலும் இடம் தராமல் ஒற்றுமையைப் பேணிக் காக்க வேண்டும். இந்த ஒற்றுமை வெறும் ஏட்டளவிலும் பேச்சளவிலும் மட்டும் இல்லாமல் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மலேசியாவில் உள்ள இந்து மக்கள், விகாரி புத்தாண்டு அன்று ஆலயத்தில் சிறப்புப் பிரார்த்தனை மேற்கொள்ளுதல் வேண்டும். நாம் நேசிக்கின்ற நாடு, குடும்பம் மற்றும் ஒவ்வோர் தனிமனிதரின் அமைதிக்காகவும் பிரார்த்தனைகளைச் செய்வது சாலச் சிறந்தது. அதோடு, “ஒற்றுமையில் அமைதி காண்போம்” என்ற கருப்பொருளையும் பயன்படுத்தி பிரார்த்தனை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பகைமை மறந்து சகோதரத்துவத்தைப் பாராட்டி, புத்தாக்க சிந்தனையுடன் இந்து சமயம் மீதான ஈடுப்பாட்டை அதிகரித்து, பிறக்கின்ற விகாரி புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம். பிறக்கின்ற விகாரி இந்து புத்தாண்டு மலேசிய இந்தியர்களுக்கு ஒற்றுமையில் அமைதி தரும் ஆண்டாக விளங்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
என்றும் இறைச் சேவையில்,
ஶ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான்
தேசியத் தலைவர்,
மலேசிய இந்து சங்கம்