ஒற்றுமை மேலோங்க இந்து தினத்தைக் கொண்டாடுவோம்!

மே 10-  நமது சமுதாயத்தில் அனைத்து இந்துக்களும், ‘இந்து’ என்ற சமய உணர்வோடு அனைவருடன் சகோதரத்துவத்தையும் நல்லுறவையும் மேம்படுத்திக் கொள்ளும் முயற்சியின் அடிப்படையில் இந்து திருநாள் தோற்றுவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம், இரண்டாவது வெள்ளிக்கிழமையில் நாம் அனைவரும் ஒரே சிந்தனையின் அடிப்படையில் ஒன்று சேர, இந்த இந்து திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

“மாறுவோம்! மாற்றுவோம்!” என்ற மலேசிய இந்து சங்கத்தின் தூரநோக்குக் கொள்கையின் அடிப்படையில் இந்து சமுதாயத்தினரிடையே சமயத்தை மதிக்கவும் அதன் அடிப்படை தத்துவங்களைக் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற மன மாற்றம் தேவை என்பதுடன் இத்தகைய மன மாற்றமே சமுதாய முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் என்பதை உணர்ந்து இந்து தினம் கொண்டாடப்பட்டுகிறது.

இத்திருநாளை அனைத்து மாநில பேரவைகளும் வட்டாரப் பேரவைகளும், ஆலயங்களும் மலேசிய இந்துகளும் ஒரே சமயத்தில் அதாவது இரவு 7.30 மணி தொடங்கி சிறப்புப் பூஜை மற்றும் இந்து சமய நிகழ்ச்சிகளுடன் கொண்டாடி மகிழ வேண்டும் என்பதே மலேசிய இந்து சங்கத்தின் நோக்கமாகும். புதிதாக அமையவுள்ள அரசாங்கத்தின் கீழ் நாட்டு மக்கள் நலம் பெற வேண்டியும் பூஜைகள் நடைபெறுவது வரவேற்கப்படுகிறது.

அவ்வகையில், இந்து தினம் கொண்டாட எண்ணம் கொண்ட ஆலய நிர்வாகமும் இந்து பெருமக்களும் அதற்கான நிகழ்ச்சி நிரலையும் தேசியத் தலைவர் மற்றும் சங்கரத்னா சிவஶ்ரீ அ.ப.முத்துக்குமார சிவாச்சாரியாரின் உரை ஆகியவற்றை மலேசிய இந்து சங்கத்திடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம். அவர்களுக்கு மின்னஞ்சல் வழி உரைகள் அனுப்பப்படும்.

தொடர்புக்கு: மலேசிய இந்து சங்கம்- 03-7784 4668 / 012-281 5175