ஓற்றுமை அரசுக்கும் குடிமக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்து

தமிழ்ப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்கவேண்டும்! -இந்து குடும்பங்களுக்கு தங்க கணேசன் வேண்டுகோள்

31 டிசம்பர் 2022-

மாணவர் பற்றாக்குறை காரணமாக மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள தமிழ்ப்பள்ளிகளை தற்காக்க வேண்டிய அருங்கடமை மலேசியாவில் உள்ள அனைத்து இந்துக் குடும்பங்களுக்கு இருப்பதாக மலேசிய இந்து சங்க தேசியத் தலைவர் ஶ்ரீகாசி சங்கபூசன் தங்க கணேசன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 432 பள்ளிகள், மிகக் குறைவான மாணவர்களைக் கொண்டுள்ள பள்ளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கல்வி அமைச்சகத்தின் நிர்வாக நடைமுறையின்படி இவை அனைத்தும் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் 135 பள்ளிகள், தமிழ்ப் பள்ளிகள் என்பது அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருப்பதால் இந்தப்பள்ளிகளை தற்காக்கும் பொருட்டு, நாட்டில் உள்ள அனைத்து இந்துப் பெற்றோர்களும் 2023 கல்வி ஆண்டில் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளில் பதியும்பொழுது, தமிழ்ப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று தங்க கணேசன் அறைகூவல் விடுத்துள்ளார்.

மலேசிய இந்து சங்கத்தின் முதன்மை சமய விழாவான திருமுறை ஓதுதலில் பங்குகொள்ளும் மாணாக்கர்களில் அதிகமான மாணவர்கள், தாய்மொழியில் திருமுறையை ஓதுவதில் தடுமாற்றத்தை எதிர்கொள்வதற்குக் காரணம், தங்களின் ஆரம்பக் கல்வியை தமிழ்ப் பள்ளிகளில் பெறாததேக் காரணம்.

இதற்குத் தீர்வு காணும் வகையில், நம் இந்து குடும்பங்களின் பெற்றோர் தங்களின் பிள்ளைகளை தமிழ்ப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும். அதேவேளை, நம்முடைய தமிழ்ப் பள்ளிகளைத் தற்காக்கவும் இது துணையாக அமையும்.

திருமுறைப் பாடல்களை, அது இயற்றப்பட்டுள்ள தாய்மொழியான தமிழ் மொழியில் ஒதும்போது கிடைக்கும் தாத்பரியமும் இறைநேசப் பார்வையும் அலாதியானது. இந்த ஆன்மீக இன்பத்தை அனுபவிக்கவும் நம் பள்ளிகளை தற்காக்கவும் வேண்டுமானால், நாட்டில் உள்ள இந்துக் குடும்பங்களின் பெற்றோர் அனைவரும் தங்களின் பிள்ளைகளை தமிழ்ப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.  

நாட்டில் புதிதாக மலர்ந்துள்ள ஒற்றுமை அரசாங்கத்திற்கும் பிரதமருக்கும் மற்றும் குடிமக்கள் அனைவருக்கும் 2023 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

You may also like...