மலேசிய இந்து சங்கம் – தனது கடமையைச் செவ்வனே ஆற்றுகிறது..!
மலேசியாவில் வாழும் இந்துக்களுக்கு தாய் சங்கமாக, முதன்மை இயக்கமாக விளங்கி வரும் மலேசிய இந்து சங்கத்தின் பால் அன்பும் நம்பிக்கையும் கொண்டுள்ள அன்பர்களுக்கு வணக்கம்.
கடந்த 55 ஆண்டுகளாக மலேசிய வாழ் இந்துக்களின் நலனில் அக்கறை கொண்டு, கால வளர்ச்சி எனும் நீரோட்டத்திலும் அதிகார அணிவகுப்பிலும் நம் இந்துக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரிய பணி ஆற்றி வருகிறது மலேசிய இந்து சங்கம்.
தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பது இங்கு வழக்கமானதாகி போனதால் என்னவோ, இந்துக்களுக்கு அரணாக விளங்கிய மலேசிய இந்து சங்கத்தின் மீது ஏளன பேச்சுகள் வந்து விழுவது வழக்கமாகி விட்டன.
அதில் ஒன்று தான், மலேசிய இந்து சங்கத்திற்கு அதிகாரம் இல்லை என்ற சொல். ஆம், அரசு சார்பற்ற இயக்கமான நமக்கு அரசு விவகாரங்களில் ‘அதிகாரம்’ இல்லாமல் இருக்கலாம். ஆனால், இந்துக்கள் சம்பந்தப்பட்ட விசயங்கள் அனைத்திற்கு முன் வந்து நிற்கும் அங்கீகாரத்தை நமது அரசாங்கமே மலேசிய இந்து சங்கத்திற்கு கொடுத்துள்ளதை யாரும் மறுக்க முடியாது.
அன்று தொட்டு இன்று வரை, இந்துக்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்கள், குறிப்பாக சட்ட ரீதியாக, சமூகவியல் ரீதியாக, சமய ரீதியாக, ஆலயம், மொழி, தனிநபர் விவகாரம் உட்பட பல விவகாரங்களுக்கு அரசாங்கத்திற்கு ஆலோசனையும் கருத்தும் நேரிடையாக கூறக் கூடிய ‘அங்கீகாரம்’ மலேசிய இந்து சங்கத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பதை யாரும் மறந்து விட முடியாது.
சுருங்க கூறின், ‘மலேசிய இந்து சங்கத்தின் குரலுக்கு அரசாங்கத்திலும் சமுதாயத்திலும் பலமும் உண்டு, நம்பிக்கையும் உண்டு.’
இந்த பலத்தினை சரிவர செய்யவே, இந்துக்களின் நலன் காக்க, நாடளாவிய அளவில் 14 மாநிலத்திலும் அவற்றில் 140க்கும் மேற்பட்ட வட்டாரங்களிலும் பேரவைகள் இயங்கி வருகின்றன. இவற்றுக்கெல்லாம் தலைமை, தேசியப் பேரவையில் உள்ள மத்திய செயலவையினர்.
எளிதில் குறை கூறிவிடலாம், ஆனால் களத்தில் இறங்கி வேலைச் செய்வது தான் கடினம். ஆனால், கடினத்தைப் பற்றி சிந்திக்காமல், நாள்தோறும் பிரதிபலன் நோக்காமல் நம் மாநில, வட்டாரப் பேரவைகளின் நிர்வாகத்தினர் சேவையாற்றி வருகின்றனர்.
நாட்டிலுள்ள இந்துக்களின் நலனே நமது முக்கிய கடப்பாடு. அதனால் தான், அரசியல் பேதமின்றி மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுடன் நல்ல அணுக்கமான உறவை மேற்கொண்டு வருகிறது மலேசிய இந்து சங்கம்.
கோவிட் 19 நச்சில் பெருந்தொற்றால், நாட்டு மக்களின் அன்றாட பணி முடங்கி போக, ஆலயங்கள் உட்பட மற்ற அமைப்புகள் வசதி குறைந்த அல்லது வருமானம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என கூக்குரல் இட்டு, களத்தில் இறங்கிய முதல் இயக்கம் மலேசிய இந்து சங்கம் தான். இதுப்போன்று சமய, சமுதாய விவகாரங்களில் முன்னிற்கும் மலேசிய இந்து சங்கத்தின் மீது தவறான கருத்துக்களும் தவறான கண்ணோட்டத்தை உண்டாக்க கூடிய வாசகங்களும் தொடர்ந்து வீசப்பட்டு வருகின்றன.
அரசாங்க ரீதியில் மலேசியாவில் உள்ள ஆலயங்களுக்கு பிரதிநிதியாக மலேசிய இந்து சங்கம் விளங்குகிறது. குறிப்பாக, இந்த நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு காலக்கட்டத்தில் ஆலயங்கள் தொடர்பான விவகாரங்களில் மலேசிய இந்து சங்கத்தின் ஆலோசனையை அரசாங்கம் கேட்டு வருகிறது. கடிவாளம் இட்ட குதிரை போல, ஒரே கோணத்தில் பார்க்காமல், அனைத்து கோணங்களையும் சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு மலேசிய இந்து சங்கம் மிக தெளிவான ஆலோசனைகளை அரசாங்கத்திடம் முன்வைத்து வருகிறது. விரைவில் அரசாங்கம் சிறந்த முடிவை எடுக்கும் என எதிர்ப்பார்ப்போம்.
மலேசிய இந்து சங்கம், ஆலயங்கள் உட்பட அனைத்து இந்துக்களுக்கும் சிறந்தவற்றை செய்ய உறுதிக் கொண்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
என்றும் இறைச் சேவையில்,
ஶ்ரீகாசி சங்கபூசன் தங்க. கணேசன்
தேசியக் கௌ. பொதுச் செயலாளர்
மலேசிய இந்து சங்கம்