4.05.2020 – கோவிட் 19 நச்சில் பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவில் கட்டுப்பாட்டோடு தளர்வு கொடுப்பதாக அரசாங்கம் அறிவித்திருந்தாலும் 12.05.2020ஆம் தேதி வரை ஆலயங்கள் பொதுமக்களுக்கு திறக்கப்படாது என்பதோடு எதிர்வரும் சித்ரா பௌர்ணமி அன்றும் பொதுமக்களுக்கு ஆலயம் செல்ல அனுமதி இல்லை என மலேசிய இந்து சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.
நாடளாவிய அளவில் கோவிட் 19 சம்பவங்கள் குறைவாக பதிவாகியுள்ளதால் கட்டுப்பாட்டு உத்தரவில் கட்டுப்பாட்டோடு தளர்வு கொடுத்து குறிப்பிட்ட அலுவலகங்கள், உணவகங்கள் போன்ற வணிக மையங்கள் திறக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அதனை ஒட்டி ஆலயங்களும் பொதுமக்களுக்கு திறக்கப்படுமா என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கட்டுப்பாட்டு உத்தரவு இன்னும் அமலில் இருக்கும் நிலையில், 12.05.2020ஆம் தேதி வரை ஆலயங்கள் பொதுமக்களுக்கு திறக்கப்படாது என்பதோடு சமய நிகழ்வுகள் ஏதும் நடைபெறாது. சித்ரா பௌர்ணமி அன்று நாடு விரைந்து நலம் பெற ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகளும் யாகங்களும் நடத்தலாம். ஆனால் அதில் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், அரசாங்கம் தளர்வு அறிவித்திருந்தாலும் நாம் அனைவரும் நிலைமையை உணர்ந்து சுய கட்டொழுங்கோடு நடந்து கொள்ள வேண்டும். உணவகங்கள் அமர்வுக்கு திறக்கப்பட்டாலும் முடிந்தமட்டில் அதனைத் தவிர்ப்பது நல்லது. இதுநாள் வரை வீட்டில் இருக்கும்போதும் வெளியிடங்களுக்கு செல்லும்போதும் கடைப்பிடித்தவற்றையே இப்போதும் கடைப்பிடிப்பது சாலச் சிறந்தது.
எனவே, தளர்வு கொடுக்கப்பட்டாலும் சூழ்நிலை கருதி, நாமும் நம் குடும்பத்தினரும் நலமாக வாழ அரசாங்கம் விதித்த விதிமுறைகள் பின்பற்றி, எந்நேரமும் தூய்மையைப் போற்றுவதோடு அவசியம் இன்றி வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.