கம்போங் பாசீர் சிவனாலய விவகாரம்: உண்மை அறிந்து பேசுங்கள்; வீணாக உளற வேண்டாம் – மலேசிய இந்து சங்கம்

ஜூன் 18, 2019 –

சிரம்பான், கம்போங் பாசீர் சிவனாலய விவகாரம் தொடர்பில் ஆதி அந்தம் தெரியாமல் பேசுவதைச் சில தரப்பினர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். முழுமையான உண்மையான விவரத்தைத் தெரிந்து கொள்ளாமல் தேவையில்லாது உளற வேண்டாம் என மலேசிய இந்து சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.

நிர்வாக பிரச்சனையை எதிர்நோக்கியுள்ள சிவனாலயத்தில் முறையான நிர்வாகத்தை அமைத்துக் கொடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பு மலேசிய இந்து சங்கத்திற்கு உண்டு. கடந்த 54 ஆண்டுகளாக ஆலய விவகாரங்களில் முறையான அணுகுமுறையோடு பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு வரும் மலேசிய இந்து சங்கம், சம்பந்தப்பட்ட இந்த ஆலயத்திற்கும் சிறந்த தீர்வை காணவே வழக்கினைத் தொடுத்துள்ளதை சில அரசியல்வாதிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஆலயங்களில் அரசியல் இருக்க கூடாது என அறைக்கூவல் விடுத்து வரும் இந்து சங்கத்திடம், சில அரசியல்வாதிகள் கால கெடு கொடுப்பது வேடிக்கையானது. எக்காரணத்தைக் கொண்டும் இந்து சங்கம் தொடுக்கப்பட்ட வழக்கினை மீட்டுக் கொள்ளாது என்பதை தெரிவித்துக் கொள்கிறது. அதனால் ஏற்படும் விளைவுகளைச் சந்திக்க மலேசிய இந்து சங்கம் தயாராக உள்ளது.

கடந்த 5-6 ஆண்டுகளாக ஆலயம் பிரச்சனைகளை எதிர்நோக்கிய போது மலேசிய இந்து சங்கத்திடம் தான் புகார்கள் வந்தன. சங்கம் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இப்போது செய்திகளில் கூறப்படுவதைப் போல எதிர்ப்பு காட்டி வரும் திடீர் ‘கம்போங் பாசீர் மக்கள்’ அப்போது எங்கே சென்றிருந்தனர் என்று தெரியவில்லை.

சமய சுதந்திர அடிப்படையில் ஆலயங்களும் ஆலயச் சொத்துகளும் அரசு கட்டுப்பாட்டின் கீழ் சென்று விடக் கூடாது என போராடி வருகிறது இந்து சங்கம். ஆனால், இந்து அறப்பணி வாரியம் என்ற பெயரில் ஆலயங்களை அரசின் கீழ் அடமானம் வைக்கும் முயற்சிகளை சில தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தனை ஆண்டுக் காலம் மலேசிய இந்துக்களுக்கு தாய் சங்கமாக இயங்கி வரும் மலேசிய இந்து சங்கத்தின் சேவைகளை இழிவுப்படுத்தும் வகையில் ‘2 வெள்ளி கம்பெனி’ என்று கூறுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். சங்க சேவைகள் இல்லாததை போல் தோற்றம் உண்டாக்குவதையும் உடனடியாக அவர்கள் நிறுத்தி கொள்வது நல்லது. நம்முடைய சேவைகளை மக்கள் நன்கு அறிவர்.

சேவை செய்வோரை இழிவுப்படுத்துவதை நிறுத்தி விட்டு, சிந்தனையை மாற்றி சமய விவகாரங்களில் மலேசிய இந்து சங்கத்துடன் ஒத்துழைத்து வேலை செய்ய அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். சங்கத்தின் செயல்திட்டங்களில் தலையிட்டு பாதகங்களை உண்டாக்க அவர்கள் முயற்சி செய்வதையும் நிறுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறோம்.

You may also like...