கெடா மாநில அரசாங்கத்தின் அராஜக செயல்!

04 டிசம்பர் 2020-

ஆலய உடைப்பு விவகாரத்தில் தனது அராஜக மற்றும் தன்மூப்பான செயலைக் கெடா மாநில அரசாங்கம் உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும். மேலும் கெடா மந்திரி பெசார் வெளியிட்ட விஷமத்தனமான அறிக்கை இந்தியர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என மலேசிய இந்து சங்கம் கண்டனம் தெரிவித்து கொள்கிறது.

நேற்று முன்தினம் அலோஸ்டார், தாமான் பெர்சத்துவில் உள்ள ராஜ முனீஸ்வரர் ஆலயத்தை அலோஸ்டார் டத்தோ பண்டார் ஆனையின்படி அதிகாலை 6 மணிக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி தகர்க்கப்பட்டது அதிர்ச்சி தரும் தன்மூப்பான சம்பவம் ஆகும்.

அதேவேளையில், இச்செயலைக் கண்டித்த ம.இ.காவை தவறாக சித்தரித்தும் கட்சியை மூட சொல்லவும் விஷமத்தனமாக பேச கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி யார்? மலேசியாவில் ஆலய விவகாரங்கள் தொடர்பில் குரல் கொடுக்க ம.இ.காவிற்கு முழு உரிமையும் உண்டு என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆலய உடைப்பு தொடர்பாக ஆலய நிர்வாகம், மலேசிய இந்து சங்கம் உட்பட யாருடனும் எந்தவொரு கலந்துரையாடலும் செய்யாமல் இச்செயல் நடந்தேறியுள்ளது. இதற்கு முன்னர் ஆலயத்திற்கு 2 அல்லது 3 முறை நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், ஆலய நிர்வாகம் இவ்விவகாரம் குறித்து மலேசிய இந்து சங்கத்தைத் தொடர்பு கொண்டு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

இதுபோன்ற ஆலய விவகாரங்களைக் கையாளவும் தீர்க்கவும் கெடா மாநில அரசாங்க செயலாளர் தலைமையில் இஸ்லாம் அல்லாத மாநில ஆலய நிர்வாக குழு (ரீபி) அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அமைப்பில் மலேசிய இந்து சங்கமோ அல்லது இந்து பிரதிநிதிகளோ அங்கம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விலாயா, சிலாங்கூர், பேராக், பகாங் ஆகிய மாநிலங்களில் அமையப்பெற்றுள்ள இஸ்லாம் அல்லாத மாநில ஆலய நிர்வாக குழுவில் (ரீபி) மலேசிய இந்து சங்கம் அங்கம் பெற்றுள்ள நிலையில், பல ஆலயப் பிரச்சனைகள் கலந்தாலோசிக்கப்பட்டு வெற்றிகரமாக தீர்வு காணப்பட்டு வருகின்றன.

ராஜ முனீஸ்வர் ஆலயப் பிரச்சனையைக் கூட சுமூகமான முறையில் தீர்வு கண்டிருக்கலாம். ஆனால், மாநில அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதற்கு மாநில மந்திரி பெசார் துணையாக இருப்பது கண்டு மலேசிய இந்து சங்கம் வருத்தம் கொள்கிறது.

அண்மையில், பாஸ் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ ஹஜி அடி அவாங் உடனான சந்திப்பில் கூட, ஆலய உடைப்பு விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் இந்து ஆலயங்கள் முறையான காரணமின்றி உடைக்கப்படாது என வாக்குறுதி அளிக்கப்பட்டது.

ஆனால், இன்றோ அந்த வாக்குறுதி மீறப்பட்டுள்ளது. இதனாலேயே, ஆரம்பத்திலிருந்தே பாஸ் கட்சியின் வாக்குறுதிகளை மலேசிய இந்து சங்கம் எதிர்த்து வந்துள்ளது. குறிப்பாக, இன்று வரை பாஸ் கட்சியின் ஹூடுட் சட்டத்தை இந்து சங்கம் ஏற்க மறுத்து வருவதற்கு இதுவே காரணம். ஆதாயம் பெற்ற பிறகு வாக்குறுதிகள் காற்றில் பறந்து விடுவதோடு அவை நமக்கே எதிராகவும் திரும்பவும் வாய்ப்பு உண்டு. எனவே, இவ்விவகாரத்தில் பாஸ் கட்சியின் தலைமைத்துவம் கவனம் செலுத்த வேண்டும்.

தற்போது, ஆலய விவகாரம் தொடர்பில் மலேசிய இந்து சங்கம், கெடா மாநில செயலாளரைச் சந்திக்கவும், விவாதிக்கவும் இஸ்லாம் அல்லாத மாநில ஆலய நிர்வாக குழுவில் இந்து சங்கம் அங்கத்துவம் பெறுவதற்கும் மேலும் இரண்டு ஆலய உடைப்பு சம்பவங்களுக்கு தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தவும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.