கொரோனா வைரஸ்: வழிப்பாட்டு தளங்களில் சுகாதாரத்திற்கு முன்னுரிமை; பெருங்கூட்டங்களைத் தவிர்ப்பது நல்லது – மலேசிய இந்து சங்கம் அறிவுறுத்து..!

மார்ச் 12, 2020-

உலக மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் கோவிட்-19 எனும் கொரோனா வைரஸின் தாக்கம் மலேசியாவிலும் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் குறிப்பாக இந்துக்கள் வழிப்பாட்டு தளங்களில் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டும் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.

அண்மைய சில வாரங்களாக கொரோனா வைரஸ் உலக அளவில் மட்டுமல்லாது மலேசியாவிலும் மிக வேகமாக பரவி வருவதை நாம் அறிவோம். இறப்பு நிலை வரை இட்டுச் செல்லும் இந்த கிருமியினால் மலேசியாவில் உயிர் பலி ஏதும் இல்லை என்றாலும் நாளுக்கு நாள் கிருமியினால் பாதிப்புறுவோரின் எண்ணிக்கை கவலை அளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது.

இதனை ஒட்டி, உலக சுகாதார நிறுவனம், பொதுமக்களை பெருங்கூட்டம் இருக்கும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ள நிலையில் நமது மலேசிய சுகாதார அமைச்சும் பொதுமக்கள் வழிப்பாட்டு தளங்கள் உட்பட பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்குமாறு மலேசியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நம் நாட்டில் சில நாட்களுக்கு முன் தேவாலயத்திலும் பள்ளி வாசலிலும் கொரோனா வைரஸ் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், இந்துக்கள் ஆலயங்களுக்கு செல்லும்போது சுகாதார அம்சங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். குறிப்பாக, ஆலயம் சென்று தொழுவது சாலவும் நன்று என்றாலும் பக்தர்கள் யாரேனும் காய்ச்சல், சளி போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் ஆலயங்களுக்கு செல்வதைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம். கும்பாபிஷேகம் அல்லது திருவிழாக்களில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்களும் தங்களின் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

முடிந்தவரையில் பெருங்கூட்டங்களைத் தவிர்ப்பது இப்போது உள்ள சூழ்நிலையில் அவசியம் என்பதை மக்கள் உணர வேண்டும். ஆலயத்திற்கோ அல்லது பொது இடங்களுக்கோ செல்லும் மக்கள் கைக்களையும் உடலையும் தூய்மையாக வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். இது பிறரிடமிருந்து நமக்கும் நம்மிடமிருந்து பிறக்கும் வைரஸ் தாக்கம் ஏற்படாமல் இருக்க உதவியாக இருக்கும். மேலும், எப்போதும் அரசாங்கம் வழங்கும் அறிவுரைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.

You may also like...