சீபீல்டு ஆலய விவகாரம்; மலேசிய இந்து சங்கத்தின் விளக்கம்!

அக்டோபர் 24- நிலப் பிரச்சனைக்கு ஆளாகியுள்ள சீபீல்டு ஆலய விவகாரம் தொடர்பில் மலேசிய இந்து சங்கம் மீது வீண் பழி போட வேண்டாம் என அதன் தேசியத் தலைவர் ஶ்ரீ காசி டத்தோ ஆர்.எஸ்.மோகன் ஷான் தெரிவித்தார்.

சீபீல்டு ஆலய விவகாரம் இன்று நேற்று தொடங்கிய பிரச்சனையல்ல. கடந்த 20 வருடங்களாக இந்த பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த ஆலய நிலம் தொடர்பாக பிரச்சனைகள் முதலில் தொடங்கிய போதே, முன்னாள் தேசிய தலைவர் டத்தோ வைத்தியலிங்கம் மற்றும் அக்காலக்கட்டத்தில் மாநில பேரவையின் தலைவர்களாக இருந்த திரு.கண்ணாணத்து மற்றும் சங்கபூசன் த.கணேசன்  தலைமையில் இருந்த மலேசிய இந்து சங்கம் தலையிட்டு அதற்கு நல்ல தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

பின்னர், டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் தேசியத் தலைவராக பொறுப்பேற்றப் பிறகும் ஆலயத்திற்கு நிரந்தர நிலம் கிடைக்கும் முயற்சிகளில் இந்து சங்கம் தொடர்ந்து ஈடுப்பட்டது. ஆனால் ஆலய நிர்வாகமோ மலேசிய இந்து சங்கம் இதில் தலையிட வேண்டாம் என்றும் இவ்விசயத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று தீர்த்துக் கொள்கிறோம் என்றும் கூறிவிட்டனர்.

இன்று இவ்வளவு குழப்பங்கள் ஏற்படுவதற்கு காரணமே ஆலய நிர்வாகத்திற்கு தலைமை ஏற்க இரு பிரிவினரிடம் நடக்கும் பிரச்சனை தான். மலேசியாவில் உள்ள இந்து ஆலயங்களைக் காக்க வேண்டும் என்ற கொள்கையோடு விளங்கும் மலேசிய இந்து சங்கம், ஆலயங்கள் சொந்த நிலத்தில் நல்ல வசதியோடு அமைக்கப்பட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு தான் இந்த ஆலய விவகாரத்தில் ஈடுப்பட்டது. அதுவும் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாம் ஏற்க வேண்டும் என்ற சூழலில் முன்பு போல ஆலயங்கள் தரைமட்டமாக்கப்படாமல் ஆகம முறைப்படி இடமாற்றம் செய்ய அனைத்து முயற்சிகளையும் இந்து சங்கம் எடுத்துள்ளது.

ஆனால், ஒரு சிலர் இந்த ஆலய விவகாரத்தை அரசியலாக்க முயற்சித்து வருவது வருத்தமளிக்கிறது. மேலும், நடந்த விசயங்களைப் பற்றி கொஞ்சமும் தெரிந்து புரிந்து கொள்ளாமல் மலேசிய இந்து சங்கம் ஆலய விவகாரத்தைக் கண்டுக் கொள்ளவில்லை என்று கூறி வருகின்றனர். போராட்டங்கள் நடத்துவதும் அதில் பங்கெடுப்பதும் மலேசிய இந்து சங்கத்தின் நோக்கமல்ல. போராட்டத்தின் வழி நிரந்தர தீர்வு கிடைக்காது என்பதை நன்கு உணர்ந்த நாம், பேச்சுவார்த்தையின் வழி நாட்டில் உள்ள இந்துக்களின் எதிர்காலத்தினைக் கருத்தில் கொண்டு அவர்கள் பயன் பெறும் வகையில் நிரந்தர தீர்வு தேடியுள்ளோம்.

உண்மை அறியாமல் பொதுமக்கள் முகநூலிலும் புலனத்திலும் தவறான விசயங்களைப் பரப்புவது வருத்தமளிக்கிறது. உண்மையான தெளிவான விசயங்களைத் தெரிந்து கொள்ள விரும்புவோர் மலேசிய இந்து சங்கத்திடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் தெரிவித்தார்.