சீபீல்டு ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய இடமாற்ற விவகாரம்! தற்காலிகமாக ஒத்திவைப்பு!

அக்டோபர் 25- இன்று காலையில், மேம்பாட்டாளருக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற ஆணைப்படி இன்று சீபீல்டு ஆலய நிலத்தைக் கைப்பற்றுவதற்கும் நாளை ஆலய விக்கிரங்களை இடமாற்றுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன்று, சீபீல்டு ஆலயத்திற்கு சென்ற பின் மாண்புமிகு குணராஜ் மற்றும் மாண்புமிகு சிவராசா ஆகிய இருவரின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்களுடன் மலேசிய இந்து சங்கமும் மேம்பாட்டாளருடன் ஆலோசனை நடத்தியது. இன்னும் இரண்டு வாரத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதாலும் மாண்புமிகு குணராஜ் மற்றும் மாண்புமிகு சிவராசா ஆகியோர் மந்திரி பெசார் ஏற்றுக் கொண்டதுபடி மலேசிய இந்து சங்கம், மேம்பாட்டாளர் தரப்பு மற்றும் இரண்டு தரப்பு ஆலய நிர்வாகத்துடனும் ஒரு சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்த இருப்பதாலும் இன்று ஆலய இடமாற்றம் நடவடிக்கையைத் தற்போதைக்கு கைவிடுமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, மேம்பாட்டாளர் தரப்பு இந்து சங்கத்துடன் ஒரு முடிவுக்கு வந்தனர்.

இந்த முடிவின்படி, ஆலய நிலத்தை இன்று மேம்பாட்டாளர் தரப்பு கைவசம் எடுத்துக் கொள்வர் என்பதுடன் திரு.செல்லப்பா மற்றும் திரு.நாகராஜு ஆகிய இரு தரப்பு நிர்வாகங்களும் வருகின்ற நவம்பர் 22ஆம் தேதி வரை இந்த ஆலய விவகாரத்தில் தலையிடக் கூடாது என்றும் சீபீல்டு ஆலயத்தின் முழுக் கட்டுப்பாட்டை மலேசிய இந்து சங்கத்திடம் ஒப்படைப்பதாகவும் முடிவெடுக்கப்பட்டது.

மலேசிய இந்து சங்கம், திரு.ராமாஜிடம் ஆலய நிர்வாகப் பொறுப்பை வருகின்ற நவம்பர் 22ஆம் தேதி வரை ஒப்படைக்கிறது. அதேவேளையில், மாநில மந்திரி பெசாருடன் நடக்கக்கூடிய சந்திப்பு கூட்டத்தில் எடுக்கக்கூடிய முடிவை அனைத்துத் தரப்பும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பது கட்டாயமாகும்.

இந்த ஆலய விவகாரத்தில் மலேசிய இந்து சங்கம் தலையிட முயன்றதற்கு காரணம், கடந்த காலங்களில் ஆலயங்கள் உடைக்கப்படும்போது முறையில்லாத வகையிலும் ஆகமப்படி இடமாற்றம் செய்யப்படாத வகையிலும் விக்கிரங்களைச் சேதப்படுத்த கூடிய நிலையிலும் இருந்தது நாம் அறிந்ததே.

ஆகவே இந்த ஆலயத்திலும் அதே மாதிரி சம்பவங்கள் நடக்க கூடாது என்பதோடு, ஆலயத்தை இடமாற்றும் நிலை ஏற்பட்டால் அது ஆகம முறைப்படி விக்கிரங்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பதே இந்து சங்கத்தின் நோக்கமாக இருந்தது. ஆலயத்தை இடிப்பது மலேசிய இந்து சங்கத்தின் நோக்கமல்ல என்பதை இங்கு தெளிவுப்படுத்த விரும்புகிறோம். அனைவருக்கும் தெரிந்தது போல, இந்த ஆலய பிரச்சனை இந்தளவிற்கு பூதாகரமாக மாறுவதற்கு செல்லப்பா மற்றும் நாகராஜு ஆகிய இரு தரப்பும் தான் காரணம் என்பதைக் கூறிக் கொள்கிறேன் என்று மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் ஶ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ்.மோகன் ஷான் தெரிவித்தார்.