சுதந்திரத்தை ஒற்றுமையாக சுவாசிப்போம்; மலேசிய இந்து சங்கத்தின் சுதந்திர தின வாழ்த்துகள்!

மலேசிய திருநாடு தனது 62ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில் மலேசிய இந்து சங்கம் அனைவருக்கும் தனது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

பல்லின மக்கள், பல்வகை கலாச்சாரங்கள், வெவ்வேறு சமயங்கள் என பன்முகம் கொண்ட மலேசியா, இன்று உலகின் பார்வையில் எழுச்சிக் கொண்ட வளர்ச்சி பாதையில் வீறு நடை போட்டுக் கொண்டிருக்கும் நாடாக மிளிர்வதற்கு மூல காரணம் நாட்டின் மீது விசுவாசம் கொண்டு வேற்றுமையிலும் ஒற்றுமையைக் காணும் மலேசியர்கள் தான்.

மத, இன, மொழி என்ற அடிப்படையில் மலேசியர்களாகிய நாம் வெவ்வேறாக காணப்பட்டாலும் இவையாவும் நமக்குள் பிரிவினைகளை உண்டாக்கும் கருவியாக ஒருபோதும் இருந்ததில்லை. இனியும் இருக்க போவதுமில்லை. அவ்வபோது சிறு மனவருத்தங்கள் ஏற்பட்டாலும் அவற்றை ஒற்றுமையை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பாக கண்டு பயணிப்பதே மலேசியாவின் தனிச் சிறப்பு.

அந்நிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் கிடைத்து 62 ஆண்டுகள் ஆகிவிட்டன. சுதந்திரம் என்பது நாட்டிற்கு மட்டுமல்ல, நமது எண்ணம் மற்றும் புத்தாக்க சிந்தனைக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாடு வளர்ச்சி அடைந்து இந்நிலையில், சுதந்திரம் என்ற பெயரில் சில கருத்துகளை வெளியிடப்படும் போது அவை பிறரின் மனத்தளவிலும் பாதிப்பு ஏற்படுத்தாத அளவில் இருப்பதை இனிவரும் காலங்களிலும் மலேசியர்கள் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.

மேலும், ஐந்தாவது தலைமுறையாக இந்நாட்டில் வாழும் மலேசிய இந்துக்கள், நாட்டுக்கும் தலைவர்களுக்கும் முழு விசுவாசமாக இருக்கின்றனர் என்பதில் ஐயமில்லை. இதனை யாராலும் மறுக்க முடியாது. அதோடு, சுதந்திர போராட்டம் தொடங்கி நாட்டின் ஒவ்வொரு அங்குல வளர்ச்சியிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட இந்திய சமுதாயம் உட்பட பிறரையும் சேர்த்து இன, மத வேறுபாடு இல்லாமல் அனைவரையும் மலேசியர்கள் என்ற கண்ணோட்டத்தில் அரசாங்கம் பார்க்க வேண்டியது அவசியம். சமயத்தின் கட்டுக்கோப்பில் இனத்தின் பெருமையை மொழி வழி உலகத்திற்கு எடுத்துரைப்போம். சுதந்திர மலேசியாவை நேசிப்போம்! அனைவருக்கும் 62ஆம் ஆண்டு சுதந்திர தின வாழ்த்துகள்.

You may also like...