11 ஏப்ரல் 2022-
பிலவ ஆண்டு முடிந்து, எதிர்வரும் வியாழக்கிழமை ஏப்ரல் 14ஆம் தேதி, சித்திரை முதலாம் தேதியான அன்று மலேசிய நேரப்படி காலை 10.24 மணிக்கு மங்களகரமான சுபகிருது (நற்செய்கை) தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது. இவ்வேளையில், மலேசிய இந்து சங்கம் சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
வாழ்வை நெறிப்படுத்தும் சனாதன தர்மமான இந்து சமயம் வெறும் வழிப்பாட்டு முறையல்ல. அது பரந்து விரிந்த வாழ்வியல் நெறி. இந்து சமயத்தின் தத்துவங்களும் தத்துவ விளக்க கருவியான சடங்கு சம்பிரதாயங்களும் அர்த்தமுடையவை; அறிவியல்பூர்வமானவை.
நம் சமயம் மற்றும் மொழி மீதான உண்மைதனை நாம் அறிந்து கொள்ளுதல் மிக அவசியமானது. தெளிவான சிந்தனையே, சிறந்த சமுதாயம் அமைய வழி வகுக்கும். அதற்கு பிறக்கவிருக்கும் தமிழ்ப் புத்தாண்டைக் காரணியாக கொண்டு, இதுநாள் வரை கடந்து வந்த பாதையினைச் சீர்த்தூக்கி பார்த்து, தீமைகளைத் தவிர்த்து நன்மைகளை அதிகரித்து வாழ்வில் மேன்மைக் கொள்ள என்ணம் கொள்வோம்.
கடந்த இரண்டு வருட காலம், கோவிட்-19 நச்சில் பெருந்தொற்றினால் பெரும் அவதிகளை நாம் கண்டாலும், அது நம்மிடையே மனிதநேயத்தையும் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும் உணர்த்தியது எனலாம். பிறக்கின்ற புத்தாண்டு, நம் துன்பங்களைக் களையும் நல்மருந்தாக அமைய வேண்டும் என இறைவனை வேண்டி கொள்வோம்.
புத்தாண்டு அன்று ஆலயத்திலிருந்து பெற்று அல்லது வீட்டினில் மருந்து நீர் தயார் செய்து தேய்த்து குளித்து புத்தாடை அணிவதோடு ஆலயம் சென்று உலக நன்மை வேண்டி சிறப்புப் பிரார்த்தனை மேற்கொள்வோம்.
பகைமை மறந்து சகோதரத்துவத்தைப் பாராட்டி, புத்தாக்க சிந்தனையுடன் சமய மற்றும் மொழி மீதான ஈடுப்பாட்டை அதிகரித்து, பிறக்கின்ற சுபகிருது (நற்செய்கை) தமிழ்ப் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.
அனைவருக்கும் மலேசிய இந்து சங்கத்தின் சார்பில் மங்களகரமான சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.