12 ஜனவரி 2023-
இளைஞர்கள் மீது அதீத நம்பிக்கை கொண்ட, இளைஞர்களுக்கு விடிவெள்ளியாக விளங்கிய சுவாமி விவேகானந்தர் அவர்களின் 160வது பிறந்தநாளை இன்று (ஜனவரி 12) உலகம் முழுதும் கொண்டாடி வருகிறோம். இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் இந்த நாளில், கடந்த வருடங்களைப் போலவே மலேசிய இந்து சங்க தேசிய இளைஞர் பகுதியின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம் இன்று சிறப்பாக தொடங்குகிறது.
கடந்த 1863ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி சுவாமி விவேகானந்தர் சிறு வயது முதலே இந்து சமயக் கொள்கைகளில் அதீத ஈடுபாடு கொண்டவராகவும் தத்துவமும், பகுத்தறிவும் மிக்கவராகவும் சேவை மனப்பான்மை கொண்டவராகவும் விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கைக்கு வழிக்காட்டியாக விளங்கும் சுவாமியின் வாசகங்களில் ‘100 இளைஞர்களை என்னிடம் அனுப்பி வையுங்கள், நான் வலிமையான நாட்டை உருவாக்கி காட்டுகிறேன்’ என்ற வாசகம், ஒவ்வொரு இளைஞனுக்கும் உத்வேகம் தரும் மந்திரமாக மாறியது. இதனால், கடந்த 1984ஆம் ஆண்டு சுவாமியின் பிறந்தநாளை ‘தேசிய இளைஞர் தினமாக’ இந்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
தனது வாழ்நாள் முழுவதையும் சேவைக்காகவே அர்பணித்த சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 10 ஆண்டுகளாக இந்து சங்கம் இரத்த தான முகாமை நடத்தி வருகிறது. கடந்த காலங்களில் ஜனவரி 12 தொடங்கி ஒரு மாதக் காலம் நடைபெற்ற இரத்த தான முகாம், இவ்வாண்டு ஜனவரி 12-இல் தொடங்கி பிப்ரவரி 28ஆம் தேதி வரை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
மாநில, வட்டாரத்தில் உள்ள சுகாதார அமைச்சு மற்றும் மருத்துவமனைகளுடன் இணைந்து இந்த இரத்த தான முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்தாண்டு 4000-க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் வழங்கிய நிலையில், இவ்வருடம் இன்னும் அதிகமானோர் இரத்த தானம் கொடுக்க முன்வருவர் என எதிர்பார்க்கின்றோம். ஆர்வமுள்ளவர்கள் அருகில் உள்ள இந்து சங்க வட்டாரப் பேரவைகளைத் தொடர்பு கொள்ளலாம்.