ஆலய வளாகத்திற்குள் திருவிழாக்களை நடத்தலாம்!

16 ஜூலை 2020-

தற்போது நடைமுறையில் உள்ள மீட்சிபெறும் நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு காலத்தில், அரசாங்கம் விதித்துள்ள செயல்பாட்டு தர விதிமுறைகளைப் (எஸ்.ஓ.பி) பின்பற்றி ஆலய வளாகத்திற்குள் மட்டும் திருவிழாக்களையும் இதர விழாக்களையும் நடத்தலாம் என மலேசிய இந்து சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.

ஆடி மாதம் தொடங்கி இருக்கும் நிலையில், ஆலயத்தில் விழாக்களையும் சிறப்பு பூஜைகளையும் நடத்தலாமா என ஆலயங்கள் கேள்வி எழுப்பி வருகின்றன. இந்நிலையில், அரசாங்கம் விதித்துள்ள எஸ்.ஓ.பி-யை ஆலய நிர்வாகத்தினர் முழுமையாக கடைப்பிடிக்க முடியும் என்றால், விழாக்களை ஆலய வளாகத்திற்குள் மட்டும் நடத்த முடியும். இது வருடாந்திர திருவிழா, ஆடி மாத சிறப்பு பூஜைகள், விநாயகர் சதுர்த்தி மற்றும் வாரந்திர பூஜைகளுக்கும் பொருந்தும்.

ஆலய வளாகத்தில் மூன்றில் ஒரு பகுதி பேர் அல்லது 1 மீட்டர் தூர கூடல் இடைவெளியைப் பின்பற்றி பக்தர்களின் எண்ணிக்கையை ஆலய நிர்வாகத்தினர் முடிவு செய்யலாம். மேலும், நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளான உடல் வெட்ப பரிசோதனை, கைக் கழுவும் திரவம், வருகையாளர் பதிவு, வயது வரம்பு ஆகியவற்றையும் கட்டாயம் ஆலய நிர்வாகங்கள் பின்பற்ற வேண்டும்.

திருவிழாக்களின் போது ஆலய வளாகத்திற்கு வெளியே ஊர்வலம், பால்குடம் ஏந்துதல் மற்றும் ரத ஊர்வலம் ஆகியவற்றை ஏற்பாடு செய்ய அனுமதி கிடையாது. அரசாங்கத்தின் அடுத்த அறிவிப்பு வரும் வரை இவ்விதிகள் பின்பற்றப்படும்.

விழாக்கள் நடத்தும்போது ஆர்ப்பாட்டம் இல்லாமல் சமய நெறிகளை பின்பற்றுவதை ஆலய நிர்வாகத்தினர் உறுதி செய்தல் வேண்டும். அவ்வாறு பக்தர்களின் எண்ணிக்கையையும் சூழ்நிலையும் கட்டுப்படுத்த முடியாது என்று எண்ணும் ஆலய நிர்வாகத்தினர் விழாக்கள் நடத்துவதைத் தவிர்க்கலாம் என மலேசிய இந்து சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.

என்றும் இறைச் சேவையில்,

ஶ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான், PMW.,JMW.,AMK.,BMK.,PJK

தேசியத் தலைவர்,

மலேசிய இந்து சங்கம்

You may also like...