சிந்தோக், ஏப்ரல் 11-
வட மலேசிய பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய மத போதகர் ஸாகீர் நாயக்கின் நிகழ்ச்சிக்கு இந்து மாணவர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் மலேசிய இந்து சங்கத்தின் தேசிய இளைஞர் பிரிவு மகஜர் ஒன்றை வழங்கியது.
தேசிய இளைஞர் பகுதி தலைவர் விவேக நாயகன் அ.தர்மன், மாநில இளைஞர் பகுதி தலைவர்களான விவேக நாயகன் எம்.குமரன் (பேராக்), திரு.என்.சிவகுரு (பினாங்கு), திரு.என். சுதாகரன் (கெடா) ஆகியோர் வட மலேசிய பல்கலைக்கழகத்தின் மாணவர் விவகார மற்றும் முன்னாள் மாணவர் பிரிவின் துணை உதவி வேந்தர் பேராசிரியர் டாக்டர் ஹென்ட்ரிக் லம்சாலியைச் சந்தித்து மகஜரை வழங்கி மேற்கண்ட விவகாரத்தைப் பற்றி பேசினர்.
மகஜரில், மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் கூறியதாவது, “மலேசிய இந்துக்களுக்கு முதன்மை இயக்கமாக விளங்கும் மலேசிய இந்து சங்கமாகிய நாங்கள், ‘முஸ்லீம் அல்லாதோர்’ என்று வட மலேசிய பல்கலைக்கழக இந்து மாணவர்களையும் இலக்காக கொண்டு அழைப்பு விடுத்திருப்பது குறித்து அதிருப்தியும் எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த அழைப்பானது, எங்களின் சமய நம்பிக்கைகளை இழிவுப்படுத்துவதோடு இந்து மாணவர்களை இஸ்லாத்திற்கு மாற்றும் முயற்சியாகவே நாங்கள் கருதுகிறோம். இது நாட்டின் அமைதிக்கும் நல்லிணக்கத்திற்கும் மிக பெரிய மிரட்டலாக விளங்குவதாக நாங்கள் நம்புகிறோம்.” என்று கூறியுள்ளார்.
அதோடு, மற்ற மதங்களை இழிவுப்படுத்தும் வகையில் ‘முஸ்லீம் அல்லாதோர்’ என்று மற்ற மதம் சார்ந்த மாணவர்களைக் குறிப்பிட்டது குறித்து எதிர்ப்புகளும் எழுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விவேக நாயகன் அ.தர்மன் கூறுகையில், “ஸாகீர் நாயக்கின் உரை மற்றவர்களுக்கு குறிப்பாக இந்து மாணவர்களுக்கு சற்றும் ஏற்புடையது அல்ல என்பது எங்களின் கருத்தாகும். வட மலேசிய பல்கலைக்கழகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட இன மாணவர்கள் பயில்கின்றனர். பல்வேறான இன பின்புலங்களைக் கொண்ட மாணவர்களின் உணர்வுகளைப் பற்றி பல்கலைக்கழகம் உணர்ந்திருப்பது அவசியம். அதுமட்டுமல்லாமல், அனைத்துலக பேச்சாளர்களை அழைப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட ஏற்பாட்டுக் குழு கல்வி அமைச்சு மற்றும் உள்துறை அமைச்சிடம் முறையான அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். அதோடு, சமூக வலைத்தளங்களின் நிகழ்ச்சி குறித்து பதிவேற்றம் செய்யும் முன் மாணவர் விவகாரப் பிரிவிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
“மற்ற சமய மாணவர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் நல்லதொரு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாணவர்கள் மீது அச்சுறுத்தல் அல்லது தூண்டுதல் போன்ற சம்பவங்கள் நடக்காது எனவும் நாங்கள் நம்புகிறோம்.”
“இதற்கு முன்னர், வட மலேசிய பல்கலைக்கழகத்தில் நடந்த சமய உரைகளில் கலந்து கொண்ட இந்து மாணவர்களின் சிலர் மதம் மாறியது தொடர்பாகவும் நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அதனால், இது போன்ற நிகழ்ச்சிகளில் இந்து மாணவர்கள் கலந்து கொள்வதைத் தவிர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. அதேவேளையில், பல்கலைக்கழகத்தில் படிக்கும் நம் மாணவர்கள் மீது அச்சுறுதல் அல்லது தூண்டப்படுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் இருக்க அமைச்சு இதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று தர்மன் கூறினார்.
கல்வி அமைச்சுக்கும் சம்பந்தப்பட்ட மகஜர் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்விவகாரம் தொடர்பில் பல்கலைக்கழக இந்து மாணவர்களுடன் மலேசிய இந்து சங்கத்தின் இளைஞர் பிரிவு தலைவர்கள் சந்திப்பு நடத்தவுள்ளனர்.