ஜூலை 22- மறைந்த நமது முன்னோர்களுக்கான ஆடி அமாவாசை தர்ப்பணம் வருகின்ற ஆடி மாதம் 15ஆம் தேதி அதாவது 31/07/19 புதன்கிழமை வருகிறது. இதில் எந்த குழப்பமும் இல்லை என மலேசிய இந்து சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.
அமாவாசை திதி அபரான்ன காலத்தில் இருக்க வேண்டும். அது சூரிய உதயம் முதல் 18 நாழிகையில் இருந்து 24 நாழிகை வரை. அதாவது மணிக்கணக்கில் சுமார் 2.15 முதல் 4.30 வரை. அமாவாசை திதி 31/07/19 அன்று மலேசிய நேரப்படி மதியம் 2 மணிக்கு ஆரம்பித்து மறுநாள் 01/08/19 அன்று காலை 11.55 வரை இருக்கிறது. 31/07/19 அன்று அபரான்ன காலத்தில் முழுமையாக இருக்கிறது. 01/08/19 அன்று அபரான்ன காலத்தில் இல்லை. அதன்படி 31ஆம் தேதி தான் ஆடி அமாவாசை தர்ப்பணம் என மலேசிய நேரப்படி கணிக்கப்பட்ட பஞ்சாங்கத்திலும் அனைத்து இந்திய, ஸ்ரீலங்கா பஞ்சாங்கங்களிலும் தெளிவாக போடப்பட்டு உள்ளது.
தமிழ் நாட்டில் இராமேஸ்வரம், கோடியக்கரை, திருவையாறு, காவிரி ஆறு, உள்ளிட்ட புண்ணிய தளங்கள், நதிகள், தீர்த்தங்களில் எல்லாம் 31ஆம் தேதி தான் தர்ப்பணம் செய்கிறார்கள். அடுத்த நாள் செய்ய மாட்டார்கள்.
மலேசியாவில் சில தனிநபர்கள், இயக்கங்கள் தேதியை மாற்றி செய்கிறார்கள். சிலர் 1ஆம் தேதி காலையில் தான் அமாவாசை இருக்கிறது, அன்று தான் செய்ய வேண்டும் என்றும், வேறு சிலர் இரண்டு நாளும் அமாவாசை இருக்கிறது, இரண்டு நாளும் செய்யலாம் என்றும் மக்களை குழப்பி கொண்டு இருக்கிறார்கள். அது முற்றிலும் தவறு.
31ஆம் தேதி மட்டும் தான் அமாவாசை தர்ப்பணம் செய்ய வேண்டும். எனவே 1ஆம் தேதி செய்யக் கூடாது அல்லது இரண்டு நாட்கள் செய்யவும் கூடாது. 31ஆம் தேதி காலையில் நாம் தர்ப்பணம் செய்யும் போது சதுர்த்தசி திதி தான் நடப்பில் இருக்கும். அமாவாசை திதி இருக்க வேண்டிய தேவை இல்லை. பொதுமக்கள் குழப்பம் இல்லாமல் 31ஆம் தேதி மட்டும் ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்யும்படி மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் ஶ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் தனது அறிக்கையில் தெரிவித்தார்.