12.01.2023-
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 15ஆம் தேதி தமிழர்கள் அனைவரும் பொங்கல் கொண்டாடவிருக்கும் நிலையில், ஜொகூரில் உள்ள தமிழர்களுக்கு குறிப்பாக தமிழ்ப்பள்ளிக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்படாதது ஏன் என்று மலேசிய இந்து சங்கம் கேள்வி எழுப்புகிறது.
தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பொங்கல் திருநாள். இறைவனுக்கும் இயற்கைக்கும் நன்றி சொல்லும் இப்பண்டிகையை சமய நம்பிக்கையோடு நாம் கொண்டாடி வருகிறோம்.இவ்வருடம், பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வரும் நிலையில், அனைத்து மாநிலங்களிலும் பொங்கல் ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆனால், ஜொகூர் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாகும். பொதுவாக, தமிழர் பண்டிகைகள் வேலை நாளில் வரும்போது பண்டிகை அல்லது விழாக்களை அனுசரிக்கும் வகையில் அன்றைய தினம், தமிழ்ப்பள்ளிகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்குவது வழக்கம். இதன்வழி, இந்திய மாணவர்கள் சமய மற்றும் பண்பாட்டு விழாக்களை அறிந்து புரிந்து அதன் உள் அர்த்தங்களை வாழ்வில் மேற்கொள்ள வழிவகுக்கும்.
ஆனால், இம்முறை ஜொகூர் மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனை மலேசிய இந்து சங்கம் கடுமையானதாக கருதுகிறது. அரசாங்கத்தின் மற்றும் கல்வி அமைச்சின் நோக்கமே, மாணவர்கள் சமயமும் பண்பாடும் சார்ந்து கல்வி அறிவு பெறவேண்டும் என்பது தான். நமது நாட்டின் கோட்பாட்டில் முதல் கோட்பாடான ‘இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்’ என்பதும் இதனையே பறைச்சாற்றுகிறது.
ஆனால், பொங்கல் போன்ற சமயமும் பண்பாடும் நிரம்பிய பண்டிகை நாட்களில் தமிழ்ப்பள்ளிகளுக்கு விடுமுறை வழங்காதது ஏன் என்ற கேள்வியை இந்து சங்கம் முன்வைக்கிறது. பண்டிகையை விட பள்ளி படிப்பு முக்கியம் என்ற கருத்து வெறும் நொண்டி சாக்கு தான். நாட்டில் உள்ளோரும் வீட்டில் உள்ளோரும் பண்டிகையைக் கொண்டாடும் வேளையில், பள்ளியில் அமர்ந்திருக்கும் மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நினைத்து பார்த்தல் அவசியம்.
எனவே, மாநில கல்வி இலாகாவும், தமிழ்ப்பள்ளி ஒருங்கிணைப்பாளர்களும் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து பொங்கல் அன்று தமிழ்ப்பள்ளிகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்க வேண்டும் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.
என்றும் இறைச் சேவையில்,
ஶ்ரீகாசி சங்கபூசன் தங்க. கணேசன் AMN.,ASA
தேசியத் தலைவர்
மலேசிய இந்து சங்கம்