டிசம்பர் மாதத்தில் அர்ச்சகர் பயிற்சி
கோலாலம்பூர், நவ.18:
சமயம் தழைக்க முன்வாரீர்!
அருள்மிகு ஆதிசங்கரர் திருமடத்தில்
டிசம்பர் மாதத்தில் அர்ச்சகர் பயிற்சி
கலந்து பயன்பெற தங்க. கணேசன் அழைப்பு
2022 டிசம்பர் மாதத்தில் 10 நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்து தர்ம அர்ச்சகர் பயிற்சியில் கலந்து பயன்பெறுவதுடன் நம் சமயம் வளர துணை புரியும்படி மலேசிய இந்து சமூகத்திற்கு இந்து சங்க தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க. கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நம் பாரம்பரிய இந்து சமயத்தில் குரு வணக்க முறைக்கு முக்கிய இடம் இருப்பதைப்போல, அர்ச்சகர்-குருக்கள் மூலமாக இறைவனை வணங்குவதும் இந்து ஆகம முறையில் நம் சமய முன்னோர்களால் வகுக்கப்பட்டுள்ளது.
அண்மைய ஆண்டுகளாக நம்முடைய வழிபாட்டுத் தலங்களில் நிலவும் அர்ச்சகர் பற்றாக்குறை சிக்கலால் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக தமிழ் நாடு மற்றும் இலங்கையில் இருந்து அர்ச்சகர்களை வரவழைக்கும் நடைமுறையில்கூட, அரசாங்க அனுமதி, குடிநுழைவு ஒப்புதல் போன்ற அம்சங்களில் பலவித தடைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
இதற்கு நிரந்தர தீர்வு காணும் வழிமுறை குறித்து மலேசிய இந்து சங்கத்தின் புதிய நிருவாகம் தீவிர அக்கறை காட்ட உள்ளது. இதற்கிடையில் தவத்திரு மகேந்திர சுவாமிகள் தலைமையில் அம்பாங்கில் இயங்கும் அருள்மிகு ஆதிசங்கரர் திருமடத்தில் 10 நாள் இந்து தர்ம அர்ச்சகர் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 16 வெள்ளிக்கிழமை மாலையில் பதிவு நடவடிக்கையுடன் தொடங்கும் இந்தப் பயிற்சி, டிசம்பர் 25 ஞாயிற்றுக்கிழமை நண்பகலுடன் நிறைவுபெற உள்ளது.
மலேசிய இந்து சங்கம், மலேசிய இந்து தர்ம மாமன்றம், மலேசிய அருள்மிகு ஆதிசங்கரர் திருமடம், மலேசிய அர்ச்சகர் சங்கம், மலேசிய குருக்கள் சங்கம், அர்த்த ஞான கல்வி மையம், மலேசிய அருள்மிகு குருஜி அறவாரியம், ஐக்கிய மலேசிய இந்துக் குரல் ஆகிய அமைப்புகளின் ஒத்துழைப்புடன் அருள்மிகு ஆதிசங்கரர் திருமடத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ள இந்த அர்ச்சகர் பயிற்சியில் வாய்ப்புள்ள சமய அன்பர்கள், இளைஞர்கள், சிறார்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் கலந்து நம் பாரம்பரிய சமயம் செழிக்க துணை நல்க வேண்டும் என்று இதன் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தங்க. கணேசன் கேட்டுக் கொள்கிறார்.
6 படிநிலைகளைக் கொண்ட அர்ச்சகர் பயிற்சியில், இது முதற்கட்டமாகும். பங்கேற்பாளர்களிடம் கட்டணம் பெறாமல் நடத்தப்படும் இந்தப் பயிற்சியில் 10 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். மேல் விவரத்திற்கு அ. இராதாகிருஷ்ணன்(019-2648667); சிவஸ்ரீ எஸ்.தியாகராஜ குருக்கள்(010-8028280); சிவஸ்ரீ என். பிரகலாத குருக்கள்(012-3702503); சிவஸ்ரீ எம்.வடிவேல குருக்கள்(018-3735766) ஆகியோருடன் தொடர்பு கொள்ளலாம்.