1.06.2021-
போலீஸ் தடுப்புக் காவலில் நிகழும் மரணங்கள் குறித்து விசாரிக்க புகார் மற்றும் போலீஸ் முறைகேடு சுயேட்சை ஆணையம் (IPCMC) ஒன்றை அரசாங்கம் உடனடியாக அமைக்க வேண்டும் என மலேசிய இந்து சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைக்கிறது.
அண்மைய காலமாக குற்றங்கள் தொடர்பில் விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்படுபவர்கள் தடுப்புக் காவலிலேயே மரணமுறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் மட்டும் 3 இந்தியர்கள் தடுப்புக் காவலின்போது மரணமுற்ற சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி, கணபதி என்பவர் தடுப்புக் காவலின்போது மரணமடைந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் மே 20ஆம் தேதி எஸ்.சிவபாலன் என்பவரும் மே 27ஆம் தேதி எஸ்.சுரேந்திரன் என்பவரும் தடுப்புக் காவலின்போது மரணமடைந்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவங்கள் தொடர்பில் போலீஸ் விசாரணை நடந்து வரும் நிலையில், சம்பவங்களுக்கான காரணத்தைக் கண்டறியவும் இனி வரும் காலங்களில் இதுப்போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்கவும் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.
குறிப்பாக, புகார் மற்றும் போலீஸ் முறைகேடு சுயேட்சை ஆணையம் (IPCMC) அமைப்பது இக்காலக்கட்டத்தில் அவசியமானது. இதற்கு முன்னர், சார்பு அற்ற நிலையில் போலீஸ் மீதான புகார்கள் மற்றும் முறைகேடுகளை விசாரிக்க சுயேட்சை ஆணையம் அமைக்கும்படி சுஹாகம், சுஹாரம் மற்றும் வழக்கறிஞர் மன்றம் ஆகியவை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுஹாரம் அமைப்பின் ஆய்வின் அடிப்படையில், தடுப்புக் காவலின் போது நிகழும் மரணச் சம்பவங்களில் 55% சம்பவங்கள் இந்தியர்களை உட்படுத்தியது என தெரிய வந்துள்ளது. முன்னதாக, ஆர்.குணசேகரன் (2008), ஏ.குகன் (2009), பி.கருணாநிதி (2013), என்.தர்மேந்திரன் (2013), சி. சுகுமார் (2013), எஸ்.பாலமுருகன் (2017), பி.சந்திரன் (2017), மற்றும் இப்போது கணபதி (2021), எஸ்.சிவபாலன் (2021), எஸ்.சுரேந்திரன் (2021) ஆகியோர் குற்றம் நிரூப்பிக்கும் முன்பே தடுப்புக் காவலின்போது இறந்துள்ளனர்.
நாட்டில் அனைத்து தரப்பினரும் போலீஸ் துறை மீது மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளனர். ஆனால், இதுப்போன்ற சம்பவங்களால் போலீஸ் துறை மீதான மதிப்பில் பாதிப்பு ஏற்பாடாமல் இருக்க அரசாங்கம் விரைந்து உகந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.