தமிழும் இந்து சமயமும் ஒருங்கே வளர்ந்த தமிழ்நாட்டில் சனாதன தர்மத்தை ஒழிக்க மாநாடா?
05 செப்டம்பர் 2023-
உலகிற்கே இந்து சமயம் எனும் ஆதியும் அந்தமும் இல்லாத சனாதன தர்மத்தைப் போதித்த தமிழ்நாட்டில் அதே தர்மத்தை ஒழிக்க வேண்டும் என ஆட்சியில் இருக்கும் அரசின் அமைச்சர் பொறுப்பில் இருப்பவரின் தலைமையில் மாநாடு நடத்தப்படுவது கண்டு மலேசிய இந்து சங்கம் வருத்தம் கொள்வதோடு தனது கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
அண்மையில், தமிழ்நாடு இளைஞர் & விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன ஒழிப்பு மாநாடு எனும் நிகழ்ச்சியில் பேசிய விசயங்கள் இந்தியா மட்டுமல்ல மலேசியா உட்பட உலகம் முழுதும் வாழும் இந்துகளின் மனதில் வருத்தத்தையும் ஒருவகை அச்சத்தையும் உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தான் சார்ந்த அரசியல் கட்சியின் கொள்கைகளை உயர்த்திக் காட்டுவதற்காக உயர்நெறி கொண்ட இந்து சமயம் எனும் சனாதன தர்மத்தைத் தரம் தாழ்த்த நினைப்பது தான் ஓர் அமைச்சருக்கு அழகா? அதிலும் நாளை உலகை ஆள போகும் இளைஞர்களுக்கு வழிக்காட்டியாக இருக்கும் அமைச்சரின் கொள்கையும் கருத்தும் நடுநிலை கருத்தாக இருக்க வேண்டாமா? இந்தியாவில் 80 விழுக்காடு மக்கள் மேற்கொள்ளும் சனாதன தர்மத்தினைப் பற்றி அமைச்சரின் கருத்து இந்துக்களை அவமதிக்கும் செயல் அல்லவா?
மலேசியாவில் வாழும் இந்தியர்களில் 85 விழுக்காட்டினர் இந்துக்களாவர். தமிழ்நாட்டு அமைச்சரின் கருத்து தானே என்று கடந்து போக கூடிய விசயமல்ல இது. தமிழ்நாட்டில் நடக்கும் பல விவகாரங்கள் மலேசியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதை அண்மைய காலமாக கண்கூடாக பார்த்து வருகிறோம். நாட்டின் இறையாண்மைக்கே ஊறு விளைக்கும் கடவுள் மறுப்பு கொள்கைகளின் மறைமுக உண்மைகள் அறியப்படாமலேயே மலேசியாவிலும் அவை பின்பற்றப்படுகின்றன.
இவ்வேளையில், சனாதன தர்மத்திற்கு எதிராக எழுப்பப்படும் கருத்துக்களால் மக்கள் ஈர்க்கப்பட்டால் இந்து சமயத்தின் உண்மையும் மாண்பும் மறைக்கப்படும் நிலை உருவாகிவிடும். தமிழ்நாட்டில் இது தான் இன்றைய நிலை. அரசியல் கொள்கைகாகவும் பிரித்தாளும் திட்டத்தை அடித்தட்டு மக்களிடம் கொண்டுச் செல்லவும் இதுபோன்ற விஷமங்கள் பரப்பப்படுகின்றன.
அமைச்சரின் கருத்தில் பெரும்பாலானவை, காலத்தால் மழுங்கி போன பழைய விவகாரங்களை ஏதோ இன்றும் நடப்பது போல காட்டி பேசி இருப்பது நோக்கத்தக்கது. மகளிர் உடன்கட்டை ஏறுவது மட்டும் தாம் சனாதன தர்மமா? நாயன்மார்களின் பெண்கள் இல்லையா? பெண்களைத் தான் நாம் கடவுளாக வணங்குகிறோம் என்பது தெரியாதா? இவற்றையெல்லாம் மூடி மறைத்து நம் சமயத்தை இழிவுப்படுத்தும் சிலருக்கு நாமே துணைப் போவது தான் கொடூரம். தனது அரசியல் லாபத்திற்காக தமிழையும் சமயத்தையும் பிரிக்க முயலும் கூட்டத்தின் அடுத்த இலக்கு தான் இந்த பிதற்றல்கள்.
இவ்வேளையில், மேன்மைக் கொண்ட சனாதன தர்மத்தை இழிவுப்படுத்தும் அமைச்சரின் கருத்துக்கு மலேசிய இந்து சங்கம் தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இது தொடர்பில் மலேசியாவிலுள்ள இந்திய தூதரகத்திற்கு அதிகாரப்பூர்வ கடிதம் எழுதப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.