தலைவர்களின் பதாகைகளுக்குப் பால் ஊற்றுவதா? இந்து சமய நம்பிக்கைகளை மாசு படுத்தாதீர்! இந்து சங்கம் கண்டனம்!

மே 2-

விரைவில் நடக்கவிருக்கும் தேர்தலை ஒட்டி வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் உருவ பதாகைகளுக்கு (கட் அவுட்) சிலர் அபிஷேகம் செய்வது போல பால் ஊற்றிய சம்பவம் மலேசிய இந்துக்களுக்கு பெரும் வருத்ததை ஏற்படுத்தியுள்ளது. இம்மாதிரியான இந்து சமய நம்பிக்கைகளைக் கேலிக் கூத்தாக்கி மாசு படுத்தப்படுவதை மலேசிய இந்து சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

பால் அபிஷேகம் என்பது புனிதமானது, கடவுளுக்கானது. இந்து சமயத்தின் நம்பிக்கையான இதனை, நடு வீதியில் வைக்கப்பட்டிருக்கும் பதாகைகளுக்குச் செய்யப்படுவதைப் பொறுப்பற்ற சிலர் உடனடியாக நிறுத்தி கொள்ளவேண்டும். இம்மாதிரி இந்து சமயத்திற்கு எதிரான காரியங்களில் ஈடுப்படுவோரைத் தட்டி கேட்க மலேசிய இந்து சங்கம் ஒருபோதும் தயங்காது எனச் சங்கத்தின் தேசியத் தலைவர் டத்தோ மோகன் ஷான் கூறினார்.

இந்து சமயத்திற்கு எதிரான இம்மாதிரியான நடவடிக்கைகளைப் பொறுப்பற்ற சிலர் உடனடியாக நிறுத்தி கொள்ளவேண்டும். கடந்த காலங்களிலும் இம்மாதிரியான சம்பவங்களுக்கு எதிராக இந்து சங்கம் குரல் கொடுத்தாலும் இன்னமும் அதே சம்பவங்கள் மீண்டும் நடப்பது கண்டிக்கத் தக்கது.

அதேவேளையில், தனது சொந்த லாபத்திற்காக ஆலயத் தலைவர் ஒருவர் பூஜைக் காலத்தில் ஆலயத்தைத் திருக்காப்பு இட்டு மூடி சென்றது தொடர்பில் இந்து சங்கம் தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. ஆலயம் என்பது பொதுவான இடம், பக்தர்கள் தங்களின் ஆன்மாவினை லயிக்க வைக்கும் இடம். இங்கு இன, அரசியல் பேதங்கள் இருக்கக்கூடாது என்பதில் இந்து சங்கம் உறுதியாக இருக்கிறது என டத்தோ மோகன் ஷான் கூறினார்.

You may also like...