தாய்மொழிப் பள்ளிகளுக்கு ஆதரவான தீர்ப்பு: நீதியை நிலைநாட்டிய சட்டத்துறைக்கு நன்றி

29.12.2021-

நாட்டில் உள்ள தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிரான வழக்கில் நமக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி நீதியை நிலைநாட்டிய சட்டத்துறைக்கு மலேசிய இந்து சங்கம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ் மற்றும் சீன தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிராக மூன்று அமைப்புகள் வழக்கு தொடர்ந்த நிலையில், இன்று நீதிமன்றத்தில் நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் தொடர்ந்து நிலைத்திருக்கும் என்றும் தாய்மொழிப் பள்ளிகள் செயல்படுவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டே இருப்பதோடு, தமிழ் மற்றும் சீன பள்ளிகளின் பயிற்று மொழியாக தமிழ்மொழியும் மாண்டரின் மொழியும் இருப்பது குறித்து எவரும் கேள்வி எழுப்ப முடியாது என கோலாம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

மலேசியாவில் ஏறக்குறைய 200 ஆண்டு வரலாற்றைக் கொண்ட தமிழ்க்கல்வியில், தமிழ்ப்பள்ளிகளின் நிலை குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் தொடுக்கப்பட்ட வழக்கில், தாய்மொழிப் பள்ளிகளுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி உரிமையை நிலைநாட்டிய உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் அவர்களுக்கு இந்து சங்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

அதேபோல், இவ்வழக்கு தொடர்பாக துடிப்புடன் முன்னெடுப்பு நடவடிக்கைகளில் இறங்கி ஏறக்குறைய 30 வழக்கறிஞர்களைத் திரட்டி போராடிய திரு. அருண் துரைசாமி அவர்களுக்கும் இறுதி வரை போராடிய வழக்கறிஞர்களுக்கும் இந்து சங்கம் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

தாய்மொழி பள்ளிகள் குறிப்பாக தமிழ்ப்பள்ளிகள் ஒருபோதும் பிரிவினைகளை வளர்த்தது கிடையாது. தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதேவேளையில், மற்ற மொழிகளுக்கும் இங்கு அதே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. உண்மையில், ஒருமொழி பள்ளிகளில் நிகழும் பிரிவினை போக்குகள் மிக அதிகம். வேற்றுமைகளைப் பாராட்டும் போக்கும் அங்கு அதிகம்.

ஆனால், தாய்மொழிப் பள்ளிகளில் பிற மொழியோடு பிற இன கலை கலாச்சாரங்களுக்கும் போதிக்கப்படுவது அதிகம் என்பது கண்கூடாக் காட்சி. இது இனங்களிடையே ஒற்றுமையைத் தான் அதிகரிக்கிறதே தவிர சில தரப்பு கூறுவது போல ஒற்றுமையை சீர்குலைக்கவில்லை என்பதை மலேசிய இந்து சங்கம் ஆணித்தரமாக கூறிக்கொள்கிறது.

அண்மையில், மலேசிய இந்து சங்கத்தின் தேசிய ஆண்டுக் கூட்டத்தில், “அரசாங்கம் தேசிய வகை தமிழ்ப்பள்ளிகளை நிலைநிறுத்தி வலுப்படுத்துவதோடு தாய்மொழி கல்வியைப் பாதுகாக்க வேண்டும்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.